Tuesday, 28 February 2017

நம் பணத்தை நமக்காக எப்படி உழைக்க வைப்பது


உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்சி.சரவணன்
யிரம் வரிகளில் சொல்ல நினைக்கும் விஷயத்தை அரை நிமிடத்தில் நமக்குப் புரிய வைத்துவிடுபவைதான் விளம்பரங்கள். அப்படியொரு அருமையான விளம்பரத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம். (வீடியோவைப் பார்க்க விரும்புகிறவர்கள்https://youtu.be/CbM1JF4NkOwஎன்ற லிங்க்கை சொடுக்கவும்)

அந்த விளம்பரத்தில், பிசினஸ்மேன் ஒருவர் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து குறட்டைச் சத்தம் வருவதைக் கேட்பார். அலுவலகத்தில் யாரும் தூங்காதபோது எப்படி அந்த குறட்டைச் சத்தம் வருகிறது என்று தேடித் தேடிப் பார்ப்பார். கடைசியில், அந்த குறட்டைச் சத்தம் இரும்புப் பெட்டியில் இருந்து வருவதைக் கண்டுபிடித்து, அதன் கதவைத் திறக்க, இரும்புப் பெட்டிக்குள் கட்டுக் கட்டாக பணம் தூங்கிக் கொண்டிருக்கும். தூங்கும் அந்தப் பணத்தைத் தொட்டவுடன்  குறட்டைச் சத்தம் அடங்கிவிடும். ‘பயன்படுத்தப் படாமல் பீரோவுக்குள் தூங்கும் பணத்தினால் எந்தப் பயனும் இல்லை. எனவே, அந்தப் பணத்தை எடுத்து பயன்படுத்துங்கள்’ என்கிற கருத்தைச் சொல்லவே இந்த விளம்பரம்.

நம் வீடுகளில்கூட இது மாதிரியான குறட்டைச் சத்தம் வருவதை கடந்த மாதங்களில் நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால், மத்திய அரசாங்கம் இப்போது 500, 1,000 ரூபாய்களின் மதிப்பை செல்லாமல் ஆக்கி இருப்பதினால், குறட்டைப்   போட்டுத் தூங்கிய பணமெல்லாம் இப்போது தன் தூக்கத்தைக் கலைத்து வெளியே வந்திருக்கிறது. எதிர்காலத்திலும் நாம் மீண்டும் இதே மாதிரிதான் செய்யப் போகிறோமா?
நிச்சயம் கூடாது என்பதைச் சொல்லவே இந்தத் தொடர். பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பீரோவில் பூட்டி வைப்பதைவிட, அதை எப்படி புத்திசாலித்தனமாக நிர்வாகம் செய்யலாம் என்பதைச் சொல்லவே இந்தத் தொடர். 

பணத்தை எப்படி நிர்வாகம் செய்வது என்று நமக்கு சரியாகத் தெரியாததால்தான், அதைக் கண்டபடி செலவு செய்கிறோம். பாதுகாப்பு என்று நினைத்து எஃப்.டி.யில் அடைத்து வைக்கிறோம். டபுள் ஆகும், ட்ரிபிள் ஆகும் என்று நம்பி,  மோசடித் திட்டங்களில் போட்டு, மோசம் போகிறோம். பங்குச் சந்தையின் அடிப்படைகளை புரிந்துகொள்ளாமல், அதில் பணத்தைப் போட்டு விட்டு, பிற்பாடு அது ஒரு சூதாட்டம் என்று புலம்பு கிறோம். தவறை நம்மிடம் வைத்துக்கொண்டு, பிறரைப் பழி சொல்லி என்ன பிரயோஜனம்?

திருநெல்வேலியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. நண்பரின் ஆலோசனையின் பேரில், பங்கு ஒன்றில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தார். அவர் முதலீடு செய்த நேரம், சர்வதேச சூழ்நிலை காரணமாக சந்தை இறங்கியது. அவர் முதலீடு செய்த தொகையும் குறைந்தது. ‘அய்யய்யோ, பணம் போச்சே!’ என்று பதறிப் போய் அத்தனை பங்கு களையும் விற்றார். சில மாதங்களில் சந்தை உயர்ந்து, அவர் முதலீடு செய்ததைவிட 20% லாபம் கிடைத்தது. பங்கு முதலீடு நீண்ட காலத்துக்கானது. குறுகிய காலத்தில் அதில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதை அவர்  அறியாத தால் வந்த நஷ்டம்தானே இது? 

வேலைக்குச் சேர்ந்த புதிதில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பினார் சுமதி. தன் உயர் அதிகாரி ஜெனிபர் முதலீடு செய்திருந்த ஃபண்ட் ஒன்றில் முதலீடு செய்தார். ஓராண்டு கழித்து அவசரத் தேவைக்கு அந்த ஃபண்ட்  யூனிட்களை விற்கப் போனால், ‘மூன்று ஆண்டுகள் விற்க முடியாது’ என்றார்கள். அது வருமான வரிச் சலுகை அளிக்கும் ஃபண்ட் என்பது அப்போதுதான் சுமதிக்கு புரிந்தது. அவரின் உயர் அதிகாரிக்கு வருமானம் அதிகம். அவர் வரிச்சலுகை பெற அந்த ஃபண்டில் முதலீடு செய்திருந்தார். ஆனால், சுமதிக்கு சம்பளம் குறைவு. அவர் அந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
மதுரையைச் சேர்ந்த முத்துபாண்டி இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்றை எடுத்தார். பாலிசி எடுத்து, ஐந்தாறு ஆண்டுகள் கழித்து, திடீரென அவர் இறந்ததால், 5 லட்ச ரூபாய் அவர் குடும்பத்துக்கு இழப்பீடாகக் கிடைத்தது. அதை வங்கி எஃப்.டி.யில் போட்டு, அதன் மூலம் வட்டியாகக் கிடைத்த ரூ.5 ஆயிரத்தை வைத்து, முத்துபாண்டியின் மனைவி வீட்டு வாடகை தருவாரா,  குழந்தைகளைப் படிக்க வைப்பாரா? 

நம்மில் பலர் கஷ்டப்பட்டு உழைத்தும் போதிய பலனை அனுபவிக்க முடியாமல் போகக் காரணம், பணத்தை எப்படி நிர்வாகம் செய்வது என்பது நமக்குத் தெரியாமல் போனதே. அதனால்தான் நாம் ஏழைகளாகவே இருக்கிறோம். பணத்தை நாம் சரியாக நிர்வாகம் செய்யத் தெரிந்துகொண்டு விட்டால், நம் வளர்ச்சிக்காக நாம் மட்டும் உழைக்கத் தேவையில்லை; நம் பணமும் நம் வளர்ச்சிக்காக உழைக்கும். நம் பணத்தை நமக்காக எப்படி உழைக்க வைப்பது என்பதற்கான சூட்சமங்களை இனி பார்ப்போம். 

தபால் அலுவலக ஆர்டி


உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்...

டந்த இதழில் வங்கித் தொடர் சேமிப்பு (ஆர்டி) பற்றி விரிவாகப் பார்த்தோம். ஆர்டி முதலீட்டிலும் வங்கி சேமிப்புக் கணக்கு போலவே, சேமிக்கும் அசலுக்கு உத்தரவாதம் இல்லை. இதற்குமுன் ஆர்டி முதலீடு, டெபாசிட் இன்ஷூரன்ஸ் அண்ட் கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷனின் (Deposit Insurance and Credit      Guarantee Corporation - DICCG)  கீழ் காப்பீடு செய்யப்பட்டது. இப்போது அது வங்கிகளின் விருப்பமாக மாற்றப்பட்டிருக்கிறது. எனவே, நீங்கள் ஆர்டி கணக்குத் தொடங்கும் வங்கியில் அதற்கு இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்டு இருக்கிறதா  என்பதைக் கவனிப்பது நல்லது. 

இந்த இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்டாலும், வங்கி ஏதாவது ஒரு காரணத்தினால் திவாலாகும் நிலை ஏற்பட்டால், ஆர்டி முதலீடு மற்றும் வட்டி எல்லாம் சேர்த்து ஒரு லட்சம் ரூபாய்க்குத்தான் உத்தரவாதம் உண்டு. அதிக தொகையை ஆர்டி-யில் முதலீடு செய்து வருபவர்கள், அதனை ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் முதலீடு செய்துவருவது லாபகரமாக இருக்கும். 

ஆர்டி மூலம் கிடைக்கும் வருமானம், தற்போதைய நிலையில் சுமார் 7 சதவிகிதமாக உள்ளது. இது பணவீக்க விகிதத்தைத் தாண்டிய நல்ல வருமானம் எனச் சொல்ல முடியாது. ஆர்டி-க்கான வட்டி விகிதம் தற்போது கடன் வட்டி விகித மாற்றத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. என்றாலும், நீங்கள் இதில் முதலீடு செய்ய தொடங்கும்போது நிர்ணயமாகும் வட்டியானது, அதன் முதிர்வுக்காலம் வரை நிலையாக இருக்கும்.  

   தபால் அலுவலக ஆர்டி!

இந்தியாவில் தபால் அலுவலக ஆர்டி-தான் முதன்முதலில் அறிமுகமானது. அதன்பிறகு  அனைத்து வங்கிகளும் இந்த ஆர்டியை அறிமுகப்படுத்தவே, தபால் அலுவலக ஆர்டியை பலரும் நாடுவது குறைந்தது. இதற்கு முக்கியக் காரணம், அதன் முதலீட்டுக் காலமே. அதாவது, தபால் அலுவலக ஆர்டி-யில் குறைந்தபட்சம் 60 மாதங்கள், அதாவது 5 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். வங்கிகளைப் போல், ஆறு மாதம், ஓராண்டு என்பதுபோல் ஆர்டி திட்டங்களை தபால் அலுவலகத்தில் கொண்டு வந்தால், இன்னும் அதிகமானவர்கள் அதில் முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகும். 

   யார் தொடங்கலாம்? 


வங்கிகளில் குறைந்தபட்ச முதலீடு ரூ.100, ரூ.500, ரூ.1,000 என இருக்கிறது. தபால் அலுவலகத்தில் குறைந்தபட்ச முதலீடு இப்போதும் ரூ.10ஆக இருக்கிறது. தற்போதைய நிலையில், வட்டி ஆண்டுக்கு 7.3 சதவிகிதமாக இருக்கிறது. இந்த வட்டி விகிதம், வங்கிகள் ஆர்டி-க்கு அளிக்கும் வட்டியைவிட சிறிது அதிகம்தான்.  

ஒரு தபால் அலுவலகத்திலிருந்து மற்றொரு தபால் அலுவலகத்துக்கு மாற்றும்  வசதி இருக்கிறது. ஆறு தவணைகளை முன்கூட்டியே மொத்தமாகக் கட்டும்பட்சத்தில், சிறிய தள்ளுபடி இருக்கிறது. தபால் அலுவலகத்தில் ஒருவருக்குச் சேமிப்புக் கணக்கு இருக்கும்பட்சத்தில், அதிலிருந்து மாதம் தோறும் ஆர்டி-க்கு பணத்தை மாற்றிக்கொள்வது வசதியாக இருக்கும்.  

மூன்றாண்டுக்குப் பிறகு தபால் அலுவலகக் கணக்கை அபராதம் இல்லாமல் முன்கூட்டியே முடித்துக் கொள்ள முடியும். ஆனால், ஆர்டி-க்கு உரிய வட்டியைத் தரமாட்டார்கள். தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்குக்கு என்ன வட்டி தருவார்களோ, அதுதான் கிடைக்கும்.
   வரிச் சலுகை உண்டா?

ஆர்டி-க்கு வரிச் சலுகை உண்டா என சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கே.ஆர். சத்திய நாராயணனிடம் கேட்டோம். ‘‘ஆர்டி வட்டி வருமானத்துக்கு டிடிஎஸ் பிடிக்கப்படும். ஒருவர் போட்டிருக்கும் அனைத்து ஆர்டி மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி சேர்ந்து ஒரு நிதி ஆண்டில்    10,000 ரூபாயைத் தாண்டும்போது 10% டிடிஎஸ் பிடிக்கப்படும். இது 2015 ஜூன் 1 முதல் நடைமுறையில் இருக்கிறது.  பான் எண் தரவில்லை எனில், 20% டிடிஎஸ் பிடிக்கப்படும்.  

வங்கிச் சேமிப்புக் கணக்கின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு நிதி ஆண்டில் ரூ.10,000 வரைக்கும் வரி எதுவும் கிடையாது. இந்தச் சலுகை ஆர்டி முதலீட்டில் இல்லை. மேலும், ஆர்டி-ஐ பொறுத்த வரை, முதலீடு, வட்டி வருமானம், முதிர்வுத் தொகை என அனைத்து நிலையிலும் வருமான வரி உண்டு, ஆர்டி மூலமான வட்டி, ஒருவரின் இதர வருமானமாகக் கணக்கிடப்பட்டு, ஒருவரின் அடிப்படை வரி வரம்புக்கேற்ப (10%, 20%, 30%) வரி விதிக்கப்படும். 

வருமானவரி வரம்புக்குள் வராத பொதுப் பிரிவினர் 15G படிவம், மூத்தக் குடிமக்கள், 15H படிவம் வங்கியில் நிரப்பிக் கொடுப்பதன் மூலம் டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் கணவன், மனைவி ஆர்டி முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்வதன் மூலமும் டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்க முடியும்.

இப்படி தொடர் சேமிப்பு மூலம் செய்யும் முதலீட்டுக்கு வரிச் சலுகை வேண்டுவோர்,  ஐந்தாண்டு லாக் இன் பிரீயட் கொண்ட வங்கி எஃப்டி-யில்  குறிப்பிட்ட இடைவெளியில் அல்லது ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச தொகையை (ரூ.100 கூட) முதலீடு செய்யலாம். இதற்கான வட்டி ஆண்டுக்கு தற்போது சுமார் 7.5%’’ என்றார்.

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்ட

       உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்...

ம் மக்களின் சேமிப்பு மற்றும் முதலீடு எதில் அதிகம் இருக்கிறது என்று பார்த்தால், ஃபிக்ஸட் டெபாசிட்தான் முதல் இடத்தில் இருக்கிறது. நம் மக்களின் முதலீடு சுமார் ரூ.99 லட்சம் கோடி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் இருக்கிறது. இது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடான ரூ.16 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது மிக மிக அதிகம். 

நம் மக்கள் எஃப்டி முதலீட்டுக்கு அதிக முக்கியத்துவம் தர மூன்று முக்கியக் காரணங்கள் உண்டு. 

1. முதலீடு செய்வது எளிது. (அதிக ஆவணங்கள் தேவையில்லை மற்றும் சுலபமான நடைமுறை). 

2. நிலையான, உறுதியான வட்டி  வருமானம்.    
    
3. ரிஸ்க் இல்லாத முதலீடு.        

இதில் மூன்றாவதாக சொல்லப்பட்ட காரணத்தில்  உண்மை இல்லை என்பது பலருக்கும் தெரியாத விஷயம். ரிஸ்க்கே இல்லை என்று நாம் நினைக்கும் எஃப்டி முதலீட்டில்  ரிஸ்க் இருக்கவே செய்கிறது. அதாவது, வங்கி திவாலாகும்போது அதில் போட்டிருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டியுடன் சேர்த்து, ரூ.1 லட்சத்துக்குதான் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. அதற்கு மேற்பட்ட தொகை கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதனால் அதிகத் தொகையை வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் ஆக போடுபவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் பிரித்துப் போடுவது நல்லது;  அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ளலாம்.    
    
  வட்டி!         

வங்கிச் சேமிப்பு வட்டியைவிடக் (ஆண்டுக்கு 4%) கூடுதலாக வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் வட்டி கிடைக்கும். இந்த வட்டி என்பது முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, இந்த வட்டியானது தற்போதைய நிலையில் 5.5% முதல் 7% வரை இருக்கிறது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாற வாய்ப்புண்டு. 

  முதலீட்டுக் காலம்!        
முதலீட்டுக் காலம் என்று எடுத்துக் கொண்டால், 7 நாட்கள் தொடங்கி 10 ஆண்டுகள் வரை செல்கிறது. தற்போதைய நிலையில், குறுகிய காலத்துக்குதான் வங்கிகளுக்கு நிதி தேவைப்படு கிறது. இதனால் குறுகிய கால முதலீட்டுக்குதான் வங்கிகள் அதிக வட்டி அளிக்கின்றன. எனவே, இப்போதைக்கு நீண்ட காலத்தைத் தவிர்த்து, குறுகிய கால முதலீட்டைத் தேர்வு செய்வது நல்லது.

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டை ஆரம்பிக்கும் போது நீங்கள் தேர்வு செய்யும் காலத்துக்கு என்ன வட்டி தருகிறோம் என வங்கி ஆரம்பத்தில் சொல்கிறதோ, அந்த வட்டியை முதிர்வுக்காலம் வரை தரும். இடையில் வட்டி ஏறினாலோ, இறங்கினாலோ நீங்கள் போட்டிருக்கும் எஃப்டி-க்கான வட்டியில் மாற்றம் இருக்காது.
  எஃப்டி கணக்கை எப்படி ஆரம்பிப்பது?

உங்களுக்கு ஏற்கெனவே வங்கிச் சேமிப்பு கணக்கு இருக்கும்பட்சத்தில், அதே வங்கியில் எஃப்டி கணக்கை சுலபமாகத் தொடங்கிவிடலாம். இல்லை என்றால் அடையாளத்துக்கான ஆதாரம் (ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு போன்ற வற்றில் ஏதாவது ஒன்றின் நகல்), முகவரிக்கான ஆதாரம் (ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், டெலிபோன் பில், மின்சார அட்டை, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு போன்றவற்றில் ஏதாவது ஒன்றின் நகல்) மற்றும் இரண்டு பாஸ் போர்ட் அளவு புகைப்படங்கள் தேவைப்படும்.
      
18 வயதுக்குக் கீழ் உள்ள மைனர் பெயரில் எஃப்டி கணக்கைத் தொடங்குகிறீர்கள் எனில், பிறப்புச் சான்றிதழ் அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வயதுக்கான ஆதாரமாக தேவைப்படும். ஏற்கெனவே வங்கிக் கணக்கு இருந்து, நெட்பேங்கிங் வசதி இருக்கும்பட்சத்தில், ஆன்லைன் மூலமாக இருந்த இடத்தில் இருந்தே எஃப்டி-யை ஆரம்பித்துவிட முடியும்.
     
  யாரெல்லாம் கணக்குத் தொடங்கலாம்?     

தனி மனிதர்கள், இந்து கூட்டுக் குடும்பம், மைனர்கள், நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள். 

  நாமினி வசதி! 

வங்கி எஃப்டி முதலீட்டுக்கு நாமினி நியமன வசதி இருக்கிறது. நாமினியை நியமிக்கவில்லை எனில், முதலீட்டாளர் மரணம் அடைந்து விட்டால், சட்டப்படியான வாரிசுகளுக்கு இந்தத் தொகை போய் சேரும். கூடியவரையில் கணக்கு ஆரம்பிக்கும்போதே நாமினியை நியமித்து, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுவிடுவது நல்லது. இந்த நாமினி சட்டப்படியான வாரிசாக இருக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் சிக்கல் இருக்க வாய்ப்பு இல்லை.

  அடமானக் கடன்!
     
வங்கி எஃப்டி பத்திரத்தை அடமானமாக வைத்துக் கடன் வாங்க முடியும். கடன் வாங்கப் போகும் நிலையில், எஃப்டி-யில் உள்ள தொகையில் சுமார் 80% முதல் 90% வரை கடன் கிடைக்கும். இந்தக் கடனுக்கான வட்டி, எஃப்டி முதலீட்டுக்கான வட்டியைவிட 1  முதல் 2% அதிகமாக இருக்கும். இது வங்கிகளைப் பொறுத்து மாறுபடக்கூடும்.  
குறைந்தபட்ச முதலீடு!
        
பொதுத் துறை வங்கிகளில் ரூ.1,000 இருந்தால், எஃப்டி-யை ஆரம்பிக்க முடியும். தனியார் வங்கி களில் இது ரூ.5,000 அல்லது ரூ.10,000-ஆக இருக்கிறது.
     
  முதிர்வுக்கு முன்பே பணத்தை எடுத்தால்..?

ஃபிக்ஸட் டெபாசிட்டில் உள்ள பணத்தை முதிர்வுக் காலத்துக்கு முன்பே எடுக்க நினைத்தால், இரண்டு இழப்புகள் ஏற்படும். ஒன்று, முன்கூட்டியே முடிப்பதற்கான அபராதம். இது 0.5-1 சதவிகிதமாக இருக்கும். இரண்டாவது, எவ்வளவு காலம் முதலீடு இருந்ததோ, அதற்கான வட்டிதான் கணக்கிட்டுத் தரப்படும்.  எஃப்டி-யில் இருந்து பணத்தைத் திரும்ப எடுக்க நினைக்கிறவர்கள் மொத்தத் தொகையை ஒரே ஃபிக்ஸட் டெபாசிட் ஆக போடாமல், 3 முதல் 4 டெபாசிட் ஆகப் பிரித்துப் போடலாம். இடையில் ஏதாவது திடீர் பணத் தேவை ஏற்பட்டால், ஏதாவது ஒரு எஃப்டி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். 
 
  வருமான வரி!        

எஃப்டி-யைப் பொறுத்தவரையில், முதலீடு, வட்டி வருமானம், முதிர்வுத் தொகை என அனைத்து நிலையிலும் வருமான வரிச் சலுகை கிடையாது.     
    
ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி வருமானம், ஒருவரின் சம்பளம் அல்லது வருமானத்துடன் இதர வருமானமாகச் சேர்க்கப்பட்டு, அடிப்படை வருமான வரம்புக்கு ஏற்ப (10%, 20% அல்லது 30%) வரி கட்ட வேண்டிவரும். ஒரு நிதி ஆண்டில் ஒருவர் மேற்கொண்டிருக்கும் அனைத்து ஃபிக்ஸட் டெபாசிட்கள் மற்றும் ஆர்டி-கள் மூலமான வட்டி வருமானம் 10,000 ரூபாயைத் தாண்டும்போது 10% டிடிஎஸ் பிடிக்கப்படும். பான் எண் தரவில்லை என்றால், 20% டிடிஎஸ் பிடிப்பார்கள். வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் இந்த வரிப் பிடித்தத்தைத் தவிர்க்க வழி இருக்கிறது.  பொதுப் பிரிவினர் 15G படிவத்தையும், மூத்தக் குடிமக்கள், 15H படிவத்தையும் வங்கியில் நிரப்பித் தருவதன் மூலம் டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் கணவன், மனைவி என எஃப்டி முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்வதன் மூலமும் டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது.  

பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டம்

உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்...
  பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டம்

ஆண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்கு முதலீடு செய்ய, ‘பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டம்’ தபால் அலுவலகத்தில் இருக்கிறது.  இந்தத் திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு, 80சி பிரிவில், வருமானவரி விலக்கு அளிக்கப்படு கிறது. வட்டி வருமானத்துக்கும் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.

10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்,  பெற்றோர்/ பாதுகாப்பாளர் உதவியுடன் இந்தத் திட்டத்தில் கணக்குத் தொடங்கலாம்; 10 வயதுக்கு மேற்பட்ட  ஆண் குழந்தைகள் இந்தத் திட்டத்தில் தாங்களாகவே கணக்குத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தின்கீழ் கணக்குத் தொடங்க அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது.

ஆண்டுக்கு, 100 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.  கணக்குத் தொடங்கிய மூன்றாம் ஆண்டிலிருந்து, கடன் வசதி இருக்கிறது. ஏழாம் ஆண்டில், 50 சதவிகிதத் தொகையைத்  திரும்பப் பெறலாம். இது 15 ஆண்டு காலத் திட்டம். அதாவது, பொதுமக்கள் சேமநல நிதித் திட்டமான  பிபிஎஃப்-ன் (பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட்)  அம்சங்களை அப்படியே கொண்டு, இந்தத் திட்டத்துக்கு ‘பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டம்’ என மத்திய அரசு பெயர் வைத்திருக்கிறது.

பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கும் மத்திய அரசு,  பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டத்தில் ஆண்டுக்கு 8 சதவிகிதமே  வட்டி வழங்குவது கவனிக்கத்தக்கது.

  

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்! 

 அடுத்து, தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களில் ஒன்றான, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme (SCSS) Account) பற்றி விரிவாகப் பார்ப்போம்.  

  அடிப்படைத் தகுதி

 கடந்த 2004-ம் ஆண்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களுக்கு வருமானவரியைச் சேமிக்கும் திட்டம் இது.  

விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் முன்கூட்டியே ஓய்வுபெற்ற 55 வயதுள்ளவர்கள் மற்றும்  அதற்கு மேற்பட்ட வயதினர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.  பணி ஓய்வுபெற்ற ஒரு மாதத்துக்குள் இதில் முதலீடு செய்துவிட வேண்டும். முதலீட்டுத் தொகை பணி ஓய்வின்போது கிடைத்தத் தொகையை விட அதிகமாக இருக்கக்கூடாது. ராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள், வயது வரம்பு எதுவும் இல்லாமல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
 
  குறைந்த முதலீட்டுத் தொகை

இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச  முதலீட்டுத் தொகை ரூ.1,000 ஆக உள்ளது. அதன் பிறகு, ஆயிரத்தின் மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ.15 லட்சம். கணவன் - மனைவி கூட்டாக இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம்.  
 
எங்கே முதலீட்டை ஆரம்பிப்பது?

தபால் அலுவலகம், எஸ்பிஐ, ஐசிஐசிஐ போன்ற வங்கிகள் மூலம் முதலீடு செய்யலாம். தற்போதைய நிலையில், சில வங்கிகளில் இந்தத் திட்டத்தில் ஆன்லைன் மூலம் சேர்ந்துகொள்ளும் வசதி இருக்கிறது. 
 
 தேவையான ஆதாரங்கள்

அடையாளம், வயது, முகவரிக்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும். மார்பளவு புகைப்படங்கள் இரண்டு தேவைப்படும்.

கணக்குத் தொடங்கும்போது, அசல் சான்றிதழ்களை உடன் எடுத்துச்செல்வது அவசியம். 
  வட்டி வருமானம், முதலீட்டுக் காலம்! 

தற்போதைய நிலையில், ஆண்டுக்கு  8.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி மூன்று மாதங்களுக்கு  ஒருமுறை வழங்கப்படும். மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் வட்டி வழங்கப்படும். 

வட்டி கணக்கிடும் ஃபார்முலா

வட்டி கணக்கிடுவதற்கான ஃபார்முலா இதுதான்...  Pr / (4X100). இதில் P என்பது Principal, அதாவது, அசல்; r என்பது Interest Rate, அதாவது வட்டி விகிதம். இந்த ஃபார்முலாவை ஓர் உதாரணத்துடன் சொன்னால் நன்றாகப் புரியும்.     

ஒருவர் ரூ. 1 லட்சம் ரூபாயை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்கிறார். வட்டி ஆண்டுக்கு 8.5%. அவருக்கு மூன்று மாதங்கள் கழித்து எவ்வளவு தொகை கிடைக்கும்? வட்டி = (1,00,000 X 8.5) / (4X100) = 1,00,000 / 400 = 2,125.
ஐந்து ஆண்டுகள் வரை முதலீட்டைத் திரும்ப எடுக்க முடியாது. அதன்பிறகு முதலீட்டுத் தொகை திரும்ப அளிக்கப்படும்போது எடுத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின்கீழ் செய்யப்படும் முதலீட்டுக்கு மூத்த குடிமக்கள் நிபந்தனைக்கு உட்பட்டு, நிதி ஆண்டில் ரூ. 1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும்.  வட்டி வருமானத்துக்கு வரி உண்டு. 

நிதி ஆண்டில் வட்டி வருமானம் 10,000 ரூபாயைத் தாண்டும்போது மூலத்தில் வரி (டிடிஎஸ்) பிடிக்கப்படும். இதைத் தவிர்க்க, படிவம் 15ஜி அல்லது 15 ஹெச்  சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம்,  ஒருவரின் இதர வருமானமாகக் கருதப்படும். அது அவரின் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, அடிப்படை வருமான வரம்புக்கு ஏற்ப (10%, 20%, 30 %) வரி கட்ட வேண்டிவரும்.  

இந்த மூத்த குடிமக்கள் திட்டத்தில் சேர்ந்துவிட்டு, இடையில் விலகினால் அபராதம் உண்டு. ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்குள் கணக்கை முடித்தால், முதலீட்டுத் தொகையில் 1.5% அபராதமாகச் செலுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகள் கழித்த நிலையில், 1% அபராதம் உண்டு.  இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். 

ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்துவிட்டு, இரண்டு ஆண்டுக்குள் கணக்கை முடித்தால் ரூ.1,500 அபராதமாகச் செலுத்த வேண்டும்.  வெளிநாட்டு இந்தியர்கள், இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் இதில் முதலீடு செய்ய அனுமதி இல்லை.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் முக்கியமான 10 அம்சங்கள்

1. ரிஸ்க் தேவையில்லை என்று நினைக்கும் மூத்த குடிமக்களுக்கு ஏற்றது.

2.  தபால் அலுவலகச் சேமிப்புத் திட்டங்களில்  அதிக வட்டி கிடைக்கும் திட்டம் இது.

3. வட்டி வருமானம் ஐந்தாண்டுகளுக்கு மாறாது.
4. முதலீட்டுச் செலவுக்கு இல்லை.

5. நாமினி நியமன வசதி உண்டு. கணக்கை முடிக்கும்முன் எப்போது வேண்டுமானலும் நாமினியை நியமித்துக்கொள்ளலாம். 
  
6. ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை இயக்கலாம். ஆனால், முதலீட்டு உச்சவரம்பு       ரூ.15 லட்சம்தான்.  

7. ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு கணக்கை மாற்றிக்கொள்ள முடியும்.

8. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி வருமானம் வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். 

9. ஐந்தாண்டுகளுக்குப் பின், முதலீட்டை மூன்றாண்டுகளுக்கு நீடித்த நிலையில், ஓராண்டு நிறைவு பெற்றபிறகு எடுக்கப்படும் தொகைக்கு அபராதம் இல்லை. 

10.
 ஆன்லைன் மூலம் சேர்ந்துகொள்ளும் வசதியும் இந்தத் திட்டத்தில் உண்டு. 

டேர்ம் டெபாசிட்

உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்...

பால் அலுவலக ‘டைம் டெபாசிட்’ அல்லது ‘டேர்ம் டெபாசிட்’ என்பது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் போன்றதுதான். இந்த டெபாசிட்டில் குறிப்பிட்ட காலத்துக்குச் செய்யப்படும் முதலீட்டுக்கு நிலையான வட்டி கிடைக்கும். குறிப்பிட்ட சதவிகித வருமானம் தேவை என்பவர்கள், இதைத் தேர்வு செய்யலாம்.  

 குறைந்தபட்ச முதலீடு


தபால் அலுவலக டைம் டெபாசிட்டில் குறைந்தபட்ச முதலீடு ரூ.200. இதன்பிறகு இதன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். 

 முதலீட்டுக் காலம் 

இந்த ‘டைம் டெபாசிட்’களின் முதிர்வுக் காலம் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் என்று இருக்கின்றன. ஒருவரின் தேவைக்கேற்ப முதலீட்டுக் காலத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம். 

 வட்டி வருமானம்


இதற்கான வட்டி ஆண்டுக்கு 7 முதல் 7.8 சதவிகிதமாக இருக்கிறது. காலாண்டுக்கு ஒருமுறை வட்டியைக் கணக்கிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும்.

 யாரெல்லாம் டெபாசிட் போடலாம்?


* தனிநபர்

* இருவர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டாக

* மைனர்கள் (பெற்றோர் அல்லது பாதுகாவலர் மேற்பார்வையுடன்)

* 10 வயதுக்கு மேற்பட்ட கல்வி அறிவுபெற்ற மைனர்கள், அவர்கள் பெயரில் டெபாசிட் ஆரம்பிக்கலாம்.

 தேவையான ஆவணங்கள்

* அடையாளத்துக்கான ஆதாரம் - ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஆதார் கார்டு -  இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல்.

* முகவரிக்கான ஆதாரம் -  ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, மின்சாரக் கட்டண அட்டை, டெலிபோன் பில், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், தபால் அலுவலகம்மூலம் பெற்ற அடையாள அட்டை -  இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல்.

* மைனர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். 

*  இரண்டு மார்பளவு புகைப்படங்கள். 
எப்படி டெபாசிட் செய்வது? 

உங்களுக்கு ஏற்கெனவே தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு இருந்தால், மிக எளிதாக ஆரம்பித்துவிடலாம். இல்லை என்றால் மேலே கூறப்பட்ட அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரம் கொடுக்கவேண்டி இருக்கும். இவற்றுக்கான அசலை டெபாசிட் போடும்போது கொண்டு செல்வது அவசியம். இந்தக் கணக்கை ஆரம்பிக்கும்போதே நாமினியை நியமித்துவிடுவது நல்லது. 

 வருமான வரிச் சலுகை

ஐந்தாண்டு ‘டைம் டெபாசிட்’டில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரிப் பிரிவு 80சி-யின் கீழ் வரிச் சலுகை இருக்கிறது. நிபந்தனைக்கு உட்பட்டு முதலீட்டுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை கிடைக்கும். வட்டி வருமானத்துக்கு அவரவர் அடிப்படை வருமான வரி வரம்புக்கேற்ப  (10%, 20%, 30%) வரிக் கட்ட வேண்டும். டிடிஎஸ் சான்றிதழ் தரமாட்டார்கள்.   
 
 கவனிக்க வேண்டிய விஷயங்கள்

1. டெபாசிட் ஆரம்பித்து ஆறு மாதங்களுக்குப் பின், முதிர்வுக்கு முன்பே இந்தக் கணக்கினை முடித்துக்கொள்ள முடியும். 

2. ஓராண்டுக்குமுன் முடிக்கப்படும் ‘டைம் டெபாசிட்’டுக்கு, தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்குக்கு அளிக்கப்படும் வட்டியே (தற்போது 4%) தரப்படும். 

3.
 ஓராண்டு கழிந்த நிலையில், முதிர்வுக்குமுன் டெபாசிட்டை முடித்தால், 1% அபராத வட்டி விதிக்கப்படும்.

4. இந்த ‘டைம் டெபாசிட்’-ன் முதிர்வுக் காலத்தை நீடித்துக்கொள்ள முடியும். அப்படி நீடிக்காமல் கணக்கினைத் தொடர்ந்தால், முதிர்வுக் காலம் தாண்டிய இரண்டு ஆண்டுகளுக்கு தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்கு (4%) வட்டி அளிக்கப்படும். 

5.
 இந்த ‘டைம் டெபாசிட்’ பத்திரத்தை அடமானம் வைத்து, அதன் மதிப்பில் சுமார் 80% கடன் வாங்கிக்கொள்ளலாம்.

6. முதிர்வுக் காலத்துக்குமுன் டெபாசிட் செய்தவர் இறந்துவிட்டால், நாமினிக்கு அந்தத் தொகை வழங்கப்படும். நாமினியின் பெயர் குறிப்பிடப்படாமல் இருந்தால், வாரிசுதாரர்களுக்கு அந்தத் தொகை போய்ச் சேரும். 

7. இந்த டைம் டெபாசிட்டை ஒரு தபால் அலுவலகத்திலிருந்து இன்னொரு தபால் அலுவலகத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும். 

8.
 மொத்தத் தொகையையும் ஒரே டெபாசிட் டாகச் செய்யாமல், வெவ்வெறு முதிர்வுக் காலத்துக்குப் பிரித்து செய்தால், தேவைப்படும்போது அபராத வட்டி கட்டவேண்டி இருக்காது. 

Post Office Monthly Income Scheme


உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும
மாதந்தோறும் முதலீட்டின் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகை வரவேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme). இதனை சுருக்கமாக எம்ஐஎஸ் (MIS) என்பார்கள்.   

 2011-ம் ஆண்டுக்குமுன், முதலீட்டுத் தொகையை இடையில் எடுக்காமல் ஆறு ஆண்டுகள் தொடர்ந்த வர்களுக்கு, முதலீட்டுத் தொகையில் 5% போனஸ் ஆக வழங்கப்பட்டது. இப்போது அது இல்லை. 

2011 டிசம்பருக்குமுன், இது ஆறு ஆண்டு காலத் திட்டமாக இருந்தது. இப்போது ஐந்து ஆண்டு காலத் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. 

 வட்டி வருமானம்


வட்டியானது மாதம் ஒரு முறை முதலீட்டாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த வட்டியை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் வட்டிக்கு வட்டி கிடையாது. தற்போது இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 7.7% வட்டி வழங்கப்படுகிறது. 

 குறைந்தபட்ச முதலீடு    

இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,500 ஆக இருக்கிறது. இதன்பிறகு இதன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். 
      
தனிநபர் ஒருவர் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் முதலீடு செய்யலாம். ஜாயின்ட் அக்கவுன்ட் என்கிறபோது ரூ. 9 லட்சம் மேற்கொள்ளலாம்.  இரண்டு பேர் அல்லது மூன்று பேர் சேர்ந்து இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம். ஒரு கணக்கில் இரண்டு பேர் சேர்ந்து, ரூ.8 லட்சம் முதலீடு செய்திருக்கிறார்கள் என்றால், இருவரின் பங்களிப்பும் சமமாக இருக்கிறது என்கிற கணக்கில்தான் எடுத்துக் கொள்ளப்படும். ஒருவரே எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால், மொத்த முதலீடு உச்ச வரம்புக்குள் இருப்பது அவசியம். மைனர் என்கிறபோது முதலீட்டு உச்ச வரம்பு ரூ.3 லட்சம் ஆகும்.    
முதிர்வுக்குப் பிறகு பணத்தை எடுக்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தபால் அலுவலக சேமிப்புக் கணக்குக்கு வழங்கப்படும் வட்டி வழங்கப்படும். இந்த முதலீட்டின் முதிர்வுக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.            

 எப்படி முதலீட்டை ஆரம்பிப்பது?
    
அருகில் உள்ள தபால் அலுவலகத்துக்கு சென்று முதலீட்டை ஆரம்பிக்கலாம். ரொக்கம், காசோலை, கேட்புக் காசோலை என ஏதாவது ஒன்றின் மூலம் முதலீட்டை மேற்கொள்ளலாம். 

கணக்கு ஆரம்பிக்கப்பட்டதும் ஒரு சான்றிதழ் மற்றும் கணக்குப் புத்தகம் வழங்கப்படும்.  
    
 யாரெல்லாம் ஆரம்பிக்க முடியும்?    

தனிநபர்கள், கணவன் - மனைவி கூட்டாக, மைனர் ஆகியோர் இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம்.  

 தேவையான ஆவணங்கள்

1. அடையாளம் : பாஸ்போர்ட், பான் கார்டு, ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்று.    

2. முகவரிக்கான ஆதாரம் : பாஸ்போர்ட்,  ஆதார், டெலிபோன் பில், மின்சாரக் கட்டண அட்டை,  ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்று. 
    
3. மைனர்கள் கணக்கு ஆரம்பிக்க  வயதுக்கான ஆதாரமாக பிறப்புச் சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படும். இரண்டு மார்பளவு புகைப்படங்கள் தேவைப்படும். கணக்கு ஆரம்பிக்கும்போது ஆவணங்களின் அசலைக் கொண்டு செல்வது அவசியம்.     
 
கவனிக்கவேண்டிய விஷயங்கள்    

* இந்தக் கணக்கைத் தொடங்கிய மூன்று  ஆண்டுக்குள் வெளியேறினால், டெபாசிட் தொகையில் 2% அபராதமாகக் கட்டவேண்டும். மூன்று ஆண்டுகள் கழித்து வெளியேறினால், 1% அபராதம் கட்டவேண்டும்.  உதாரணமாக, ஒருவர் எம்ஐஎஸ்-ல் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருக்கிறார். இரண்டு ஆண்டு கழித்து அவசரத் தேவைக்காக இந்தக் கணக்கை முடிக்கும்போது அவருக்கு 98,000 ரூபாய்தான் கிடைக்கும்.

* டெபாசிட்தாரர் இடையில் இறந்துவிட்டால், நாமினி அல்லது வாரிசுதாரர்களுக்கு அந்தத் தொகை வழங்கப்படும். 
            
* இந்த எம்ஐஎஸ் கணக்கை ஒரு தபால் அலுவலகத்தில் இருந்து இன்னொரு தபால் அலுவலகத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

* டிடிஎஸ் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.

* தனிநபர் கணக்கைக் கூட்டுக் கணக்காக மாற்றிக் கொள்ள முடியும். இதேபோல், கூட்டுக் கணக்கை தனிக் கணக்காவும் மாற்றிக்கொள்ள முடியும்.        

* மைனர், மேஜர் ஆனவுடன் தந்தை, தாய் அல்லது கார்டியன் பெயரில் இருக்கும் கணக்கை தன் பெயருக்கு மாற்றிக்கொள்ள முடியும். 

 வருமான வரிச் சலுகை

முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு வரிச் சலுகை எதுவும் கிடையாது. வட்டி வருமானத்தை இதர வருமானமாகக் காட்டி வரி கட்டவேண்டி வரும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்


உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்...

 இந்த இதழில் கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் பற்றி பார்ப்போம். 

கம்பெனி எஃப்.டி என்பது வங்கி எஃப்.டி போல்தான். ஆனால், இரண்டு வித்தியாசங்கள் உள்ளன. முதல் வித்தியாசம், இதனை வெளியிடுவது வங்கிகளுக்குப்பதில், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள். இரண்டாவது, வங்கி எஃப்.டி-யை விட, கம்பெனி எஃப்.டி-யில் வட்டி அதிகம். ரிஸ்க்கும் இருக்கிறது.
கம்பெனி எஃப்.டி-யை உற்பத்தி நிறுவனங்கள், நிதிச் சேவை நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி), வீட்டு வசதி நிறுவனங்கள் போன்றவை வெளியிடுகின்றன. இந்த நிறுவனங்கள் அவற்றின் செயல்பாட்டுச் செலவுகள், விரிவாக்க நடவடிக்கைகளுக்காக எஃப்.டி-யை வெளியிட்டு நிதியைத் திரட்டுகின்றன. சில நிறுவனங்கள் அதிக வட்டியிலான கடன்களை அடைக்கவும் எஃப்.டி வெளியிடுவது உண்டு. 

 எப்படி முதலீடு செய்வது?

கம்பெனிகள் இதற்கான அறிவிப்பை வெளியிடும்போது, விண்ணப்பிக்க வேண்டும். நிறுவனங்கள் அல்லது அவற்றின் ஏஜென்ட்கள் மூலம் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

இதில் முதலீடு செய்ய வேண்டும் எனில்,  அடையாளத்துக்கான ஆதாரம் (ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ்), முகவரிக்கான ஆதாரம் (ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ்), மார்பளவு புகைப்படங்கள் இரண்டு தேவைப்படும். 

 யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?


சிறார்கள், இந்துக் கூட்டுக்குடும்பங்கள், இந்தியர்கள் அனைவரும் இதில் முதலீட்டை மேற்கொள்ளலாம். குறைந்தபட்ச முதலீடு கம்பெனிகளைப் பொறுத்து மாறுபடும். இது ரூ.5,000 அல்லது ரூ.10,000 ஆக இருக்கும். 

 முதலீட்டுக் காலம்!

கம்பெனி டெபாசிட்களின் முதலீட்டுக் காலம்  மற்றும் முதிர்வுக் காலம் என்பது அதனை வெளியிடும் நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடும். உற்பத்தி நிறுவனங்கள் வெளியிடும் ஃபிக்ஸட் டெபாசிட்களின் முதிர்வுக் காலம் 6 மாதங்கள் தொடங்கி 3 ஆண்டுகள் வரைக்கும் இருக்கும். இதுவே, என்பிஎஃப்சி வெளியிடும்    எஃப்.டி-களின் முதலீட்டுக் காலம் 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக இருக்கும். வீட்டு வசதி நிறுவனங்கள் வெளியிடும் எஃப்.டி-களின்  முதலீட்டுக் காலம் 1 முதல் 7 ஆண்டுகளாக இருக்கின்றன. 

 வட்டி, வட்டி வருமானம்!

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்களின் வருமான மானது,  வங்கித்  திட்டங்கள் தரும் வருமானத்தை விட அதிகம் என ஏற்கெனவே பார்த்தோம். தற்போதைய நிலையில், வங்கி எஃப்.டி-க்கான வட்டி விகிதம் 7% அளவுக்குக் குறைந்திருக்கிறது. இதனைவிட 2 - 3% கூடுதலான வட்டி, கம்பெனி எஃப்.டி-யில்  கிடைக்கும். 

கம்பெனி எஃப்.டி மூலமான வட்டியை மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு என தேவைக்கு ஏற்ப பெற்றுக்கொள்ளலாம். வட்டியானது காசோலை மூலம் அனுப்பப்படும் அல்லது இ.சி.எஸ் மூலம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.  இதற்கான ஆப்ஷனை முதலீட்டை மேற்கொள்ளும்போதே தேர்வு செய்துவிட வேண்டும். வட்டி இடையிலேயே வழங்கப்பட்டு விடுவதால், எஃப்.டி. முதிர்வடையும்போது அசல் தொகை மட்டும் திரும்பக் கிடைக்கும்.  

 முதிர்வுக்கு முன்பே முடித்தல்!

பெரும்பாலான கம்பெனிகள் ஃபிக்ஸட் டெபாசிட்டை, முதலீடு செய்ததில் இருந்து ஆறு மாதத்துக்கு முன்பே எடுக்க அனுமதிப்பதே இல்லை. அப்படி எடுக்க வேண்டியிருந்தால், அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் சுமார் 0.5-1 சதவிகிதமாக இருக்கும். ஓராண்டுக்கு மேல் என்றால், முன்கூட்டியே முடிப்பதற்கான அபராதம் இருக்கும். எவ்வளவு காலம் முதலீடு இருந்ததோ, அதற்கான வட்டிதான் கணக்கிடப்பட்டுத் தரப்படும். 
 
இடையில் எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும் என நினைக்கிறவர்கள் மொத்த தொகையை ஒரே கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டில்  போடாமல், பிரித்துப் போடலாம். 
 
 கடன் வசதி! 

கம்பெனி எஃப்.டி பத்திரத்தை அடமானமாக வைத்துக் கடன் பெறலாம். பத்திரத்தின் மதிப்பில் சுமார் 90% வரை கடன் கிடைக்கும். இந்தக் கடனுக்கான வட்டி,  எஃப்.டி வட்டியைவிட 1-2% அதிகமாக இருக்கும். இந்தக் கடனை  நிதிச் சேவை நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் அவற்றின் எஃப்.டி-களுக்கு வாங்கிக்கொள்ள முடியும். உற்பத்தி நிறுவனங்கள் போன்றவற்றின் எஃப்.டி பத்திரத்தை வங்கிகள், நிதி நிறுவனங்களில், கடன் அடமானம் வைப்பதன் மூலம் பெறலாம்.
   
 வரிப் பிடித்தம்!

கம்பெனி எஃப்.டி-யைப் பொறுத்தவரை,  முதலீடு, வட்டி வருமானத்துக்கு வரிச் சலுகை கிடையாது. இது குறித்து சென்னையின் முன்னணி ஆடிட்டர் எஸ். சதீஷ்குமார் விளக்கம் தந்தார்.

“வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களில் ஒருவர் போட்டிருக்கும் மொத்த முதலீட்டின் மூலம் நிதி ஆண்டில் 10,000 ரூபாய்க்கு மேல் வட்டி கிடைத்தால், மூலத்தில் (Source) வரிப் பிடிக்கப்படும் (டிடிஎஸ்). இந்த வட்டித் தொகை கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்களில் ரூ.5,000-ஆக இருக்கிறது. இந்த வரிப் பிடித்தத்தைத் தவிர்க்க, வருமான வரித் துறையிடமிருந்து, எனது வருமானம்,  அடிப்படை வரி வரம்புக்குக் கீழே இருக்கிறது, எனக் கடிதம் வாங்கித் தர வேண்டும். இப்படி செய்யும்போது, முந்தைய ஆண்டுகளில் வரி எதுவும் கட்டி இருக்கக்கூடாது. 

சில வங்கிசாரா நிதி நிறுவனங்கள் பொதுப் பிரிவினர் 15G படிவம், மூத்த குடிமக்கள், 15H படிவம் சமர்பித்தாலும் ஏற்றுக்கொள்கின்றன. வரிப் பிடித்தம் செய்வதைத் தவிர்க்க நினைத்தால், குடும்பத்தில் உள்ளவர்கள் பெயரில் பிரித்து முதலீடு செய்யலாம். வட்டி வருமானம், ஒருவரின் வருமானத்துடன் இதர வருமானமாகச் சேர்க்கப் பட்டு, அவரின் அடிப்படை வரி வரம்புக்கேற்ப 10%, 20%, 30% வரி கட்ட வேண்டியிருக்கும்” என்றார். 

 மூலதனத்துக்கு உத்தரவாதம் இல்லை!


வங்கி எஃப்.டி-யில் முதலீடு மற்றும் வட்டி சேர்த்து ரூ.1 லட்சம் வரைக்கும் இன்ஷூரன்ஸ் மூலம் உத்தரவாதம் அளிக்கப்படும். அந்த  மாதிரியான உத்தரவாதம் கம்பெனி டெபாசிட்களில் இல்லை.  டெபாசிட்களை வெளியிட்ட நிறுவனம் சரியாகச் செயல்படவில்லை எனில், வட்டி மற்றும் முதிர்வுத்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அந்த வகையில், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டில் அதிக ரிஸ்க் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 

 கவனிக்க வேண்டியவை!


கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்களைத் தேர்வு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்...

1. கம்பெனியின் பாரம்பர்யம் மிக முக்கியம்.

2. எஃப்.டி. வெளியிடும் நிறுவனங்கள் குறைந்தது கடந்த 5 ஆண்டுகளாவது லாபகரமாக இயங்கி வர வேண்டும்.

3. க்ரைசில், இக்ரா, கேர், ஃபிட்ச் போன்ற நிறுவனங்களின் நல்ல தரக்குறியீட்டைப் (AA or AAA) பெற்றிருப்பது அவசியம்.

4. நிறுவனத்தின் நம்பகத்தன்மையை, அந்த நிறுவனம் பற்றி இணையதளங்களில் வந்திருக்கும் விமர்சனங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.  
 
5. எஃப்.டி மூலம் திரட்டப்படும் நிதி எதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கவனித்து முதலீடு செய்வது அவசியம். கடனை அடைக்க என்றால் முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது.

கிஸான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra - KVP).

நாம் செய்கிற முதலீடு, குறிப்பிட்ட ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்பவர்களுக்கு ஏற்றதாக உள்ளது தபால் அலுவலகத் திட்டமான கிஸான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra - KVP).

இந்தத் திட்டம் 2014-ல் (மீண்டும்) அறிமுகம் செய்யப்பட்டபோது, 100 மாதங்களில் (8 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள்) முதலீடு இரு மடங்காக அதிகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டதால், அது கவர்ச்சிகரமானதாக இருந்தது. அப்போது ஆண்டுக்கு 8.7% வட்டி வழங்கப்பட்டது. இப்போது வட்டி விகிதம் 7.7 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் முதலீடு இரு மடங்கு ஆக 112 மாதங்கள் (9 ஆண்டு 2 மாதம்) எடுத்துக்கொள்ளும் நிலை உருவாகி இருக்கிறது.

 எங்கே முதலீடு செய்யலாம்?

கிஸான் விகாஸ் பத்திரங் களை  தபால் அலுவலகங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

 யாரெல்லாம் முதலீடு செய்ய முடியும்?

தனிநபர், இருவர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டாக முதலீடு செய்யலாம். மைனர்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலர் மேற்பார்வையுடன் ஆரம்பிக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட கல்வி அறிவு பெற்ற மைனர்கள், அவர்கள் பெயரில் டெபாசிட் ஆரம்பிக்கலாம்.

 குறைந்தபட்ச முதலீடு

இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000. அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானலும் முதலீடு செய்ய முடியும். ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 மற்றும்  ரூ.50,000 என்கிற மதிப்புகளில் பத்திரங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ரூ.50,000-க்கு மேல் முதலீடு செய்யும்போது, பான் எண் கொடுக்க வேண்டும். ரூ.10 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்யும்பட்சத்தில் வருமானத்துக்கான ஆதாரத்தைக் கொடுக்கவேண்டும்.

 தேவையான ஆவணங்கள் 

அடையாளத்துக்கான ஆதாரம் (பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுநர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார்), முகவரிக்கான ஆதாரம் (பாஸ்போர்ட், ஓட்டுநர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், டெலிபோன் ரசீது, மின் கட்டண அட்டை) தேவைப்படும். இரண்டு மார்பளவு புகைப்படங்கள் தேவைப்படும்.

டெபாசிட் செய்தவர் மரணம் அடைந்தால் மட்டும் முன்கூட்டியே கணக்கை முடிக்க முடியும். இந்தக் கணக்கை ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகளுக்குப் (30 மாதங்கள்) பிறகே முடிக்க   அனுமதிக்கப்படுகிறது. அப்போது முதலீடு எவ்வளவு காலம் இருந்ததோ, அதற்குரிய வட்டி மட்டுமே தரப்படும். மேலும், ஆறு மாதக் கணக்கின் அடிப்படையில்தான் வட்டி வழங்கப்படும்.

 வரிச்சலுகை

முதலீடு மற்றும் முதிர்வுக்கு வருமான வரிச் சலுகை இல்லை. வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டிவரும். மூலத்தில் வரியைப் பிடிக்க (டிடிஎஸ்) மாட்டார்கள்.

Children's Money Back

 கவனிக்க வேண்டிய விஷயங்கள்

1. கிஸான் விகாஸ் பத்திரத்தை அடமானமாகப் பெற்றுக் கொண்டு வங்கிகள் கடன் வழங்குகின்றன. எவ்வளவு தொகை கடனாகக் கிடைக்கும், வட்டி எவ்வளவு என்பது வங்கிக்கு வங்கி மாறுபடும்.  பொதுவாக, முதலீட்டு மதிப்பில் 80-90% வரை கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

2. ஒரு தபால் அலுவலகத்திலிருந்து இன்னொரு தபால் அலுவலகத்துக்கு இந்த முதலீட்டின் கணக்கை மாற்றிக் கொள்ள முடியும். முதலீட்டை ஒருவர் பெயரில் இருந்து இன்னொருவர் பெயருக்கும் மாற்றிக் கொள்ள முடியும்.

Saturday, 25 February 2017

புரியாதவர்களுக்கு புரியவைப்போம்


சுத்தமான மீத்தேன்: 👍👇👇👇👇
சுத்தமான மீத்தேன் வாயு ஒரு கிலோ வேண்டுமானால் 37 கிலோ மாட்டு சாணம் தேவை.
40 கிலோ என்று கூட வைத்துக் கொள்ளலாம்..
நெடுவாசல் மீத்தேன் திட்டம் மூலம் 5 மில்லியன் டன் மீத்தேன் எடுக்க திட்டம் உள்ளது. இதற்கான பட்ஜெட் 6000 கோடி.
கால அவகாசம் முப்பது வருடம்.
இதே அளவு மீத்தேன் வாயுவை சாணத்தில் எடுக்க வேண்டுமானால் 18 லட்சத்து 50 ஆயிரம் மாடுகள் தேவை.
இதற்கான செலவு 1850 கோடிகள்.
இயற்கையை அழித்து பூமியை வறட்சி ஆக்கி விவசாயத்தை ஒழித்து 6000 கோடியில் கிடைக்கும் மீத்தேன் வாயுவை 1850 கோடியில் எடுக்க முடியும்.
கூடுதலாக கிடைக்கும் பலன்கள்:
1) பால் வளம் பெருகும்
2) விவசாயிகள் வாழ்வு மேம்படும்
3) இயற்கை வளம் மேம்படும்.
4) விவசாயம் செழிக்கும்.
5) முக்கியமாக சுற்றுச்சூழல் பாதிக்காது.
முப்பது வருடத்தில் தீர்ந்துவிடும் மீத்தேன் தேவையில்லை.
ஆண்டாண்டுக்கும் கிடைக்கக்கூடிய சாண எரிவாயுவே நமக்குத் தேவை.
புரியாதவர்களுக்கு புரியவைப்போம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் திருச்சியில் கைது

*ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற 6 பேரிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது*

*ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் இருந்து நெடுவாசல் வரை இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற 13பேர் கைது*

Canadian pm visit india

Canadian PM expected to visit India this year http://dhunt.in/20JsL?s=a&ss=com.google.android.apps.blogger via Dailyhunt

Jio Next Target Call Taxi

ஜியோவின் அடுத்த டார்கெட் கால்டாக்ஸி http://dhunt.in/20DbP?s=a&ss=com.google.android.apps.blogger via Dailyhunt

ஜல்லிக்கட்டு புரட்சி புதிய கட்சி

ஜல்லிக்கட்டு புரட்சி.. புதிதாக உருவாகியது 'என் தேசம் என் உரிமை கட்சி' http://dhunt.in/20IjW?s=a&ss=com.google.android.apps.blogger via Dailyhunt

Children's Money Back

குழந்தைகளின் எதிரிகால தேவைக்கு ஏற்ற  LIC  பாலிசி







http://www.revmuthal.com/p/finance-investment-index.html