Tuesday, 28 February 2017

கிஸான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra - KVP).

நாம் செய்கிற முதலீடு, குறிப்பிட்ட ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்பவர்களுக்கு ஏற்றதாக உள்ளது தபால் அலுவலகத் திட்டமான கிஸான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra - KVP).

இந்தத் திட்டம் 2014-ல் (மீண்டும்) அறிமுகம் செய்யப்பட்டபோது, 100 மாதங்களில் (8 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள்) முதலீடு இரு மடங்காக அதிகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டதால், அது கவர்ச்சிகரமானதாக இருந்தது. அப்போது ஆண்டுக்கு 8.7% வட்டி வழங்கப்பட்டது. இப்போது வட்டி விகிதம் 7.7 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் முதலீடு இரு மடங்கு ஆக 112 மாதங்கள் (9 ஆண்டு 2 மாதம்) எடுத்துக்கொள்ளும் நிலை உருவாகி இருக்கிறது.

 எங்கே முதலீடு செய்யலாம்?

கிஸான் விகாஸ் பத்திரங் களை  தபால் அலுவலகங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

 யாரெல்லாம் முதலீடு செய்ய முடியும்?

தனிநபர், இருவர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டாக முதலீடு செய்யலாம். மைனர்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலர் மேற்பார்வையுடன் ஆரம்பிக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட கல்வி அறிவு பெற்ற மைனர்கள், அவர்கள் பெயரில் டெபாசிட் ஆரம்பிக்கலாம்.

 குறைந்தபட்ச முதலீடு

இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000. அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானலும் முதலீடு செய்ய முடியும். ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 மற்றும்  ரூ.50,000 என்கிற மதிப்புகளில் பத்திரங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ரூ.50,000-க்கு மேல் முதலீடு செய்யும்போது, பான் எண் கொடுக்க வேண்டும். ரூ.10 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்யும்பட்சத்தில் வருமானத்துக்கான ஆதாரத்தைக் கொடுக்கவேண்டும்.

 தேவையான ஆவணங்கள் 

அடையாளத்துக்கான ஆதாரம் (பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுநர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார்), முகவரிக்கான ஆதாரம் (பாஸ்போர்ட், ஓட்டுநர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், டெலிபோன் ரசீது, மின் கட்டண அட்டை) தேவைப்படும். இரண்டு மார்பளவு புகைப்படங்கள் தேவைப்படும்.

டெபாசிட் செய்தவர் மரணம் அடைந்தால் மட்டும் முன்கூட்டியே கணக்கை முடிக்க முடியும். இந்தக் கணக்கை ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகளுக்குப் (30 மாதங்கள்) பிறகே முடிக்க   அனுமதிக்கப்படுகிறது. அப்போது முதலீடு எவ்வளவு காலம் இருந்ததோ, அதற்குரிய வட்டி மட்டுமே தரப்படும். மேலும், ஆறு மாதக் கணக்கின் அடிப்படையில்தான் வட்டி வழங்கப்படும்.

 வரிச்சலுகை

முதலீடு மற்றும் முதிர்வுக்கு வருமான வரிச் சலுகை இல்லை. வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டிவரும். மூலத்தில் வரியைப் பிடிக்க (டிடிஎஸ்) மாட்டார்கள்.

Children's Money Back

 கவனிக்க வேண்டிய விஷயங்கள்

1. கிஸான் விகாஸ் பத்திரத்தை அடமானமாகப் பெற்றுக் கொண்டு வங்கிகள் கடன் வழங்குகின்றன. எவ்வளவு தொகை கடனாகக் கிடைக்கும், வட்டி எவ்வளவு என்பது வங்கிக்கு வங்கி மாறுபடும்.  பொதுவாக, முதலீட்டு மதிப்பில் 80-90% வரை கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

2. ஒரு தபால் அலுவலகத்திலிருந்து இன்னொரு தபால் அலுவலகத்துக்கு இந்த முதலீட்டின் கணக்கை மாற்றிக் கொள்ள முடியும். முதலீட்டை ஒருவர் பெயரில் இருந்து இன்னொருவர் பெயருக்கும் மாற்றிக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment