Wednesday, 1 March 2017

இயற்கை வேளாண்மையின் மகிமை


‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வாரின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு இயற்கை விவசாயம் செய்து வருபவர்கள் ஏராளமானோர் உண்டு. அவர்களில் பல பெண் விவசாயிகளும் அடக்கம். அப்படிப் பயிற்சி எடுத்துக்கொண்டு திறம்படச் செயல்பட்டுவரும் குறிப்பிடத்தக்க பெண் விவசாயிகளில் ஒருவர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி.
 
மானாவாரி இயற்கை விவசாயம் செய்துவரும் இவர், ‘இளவட்டம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, சுற்றுச்சூழல், இயற்கை விவசாய முறைகள், மறந்துபோன விளையாட்டுகள் ஆகியவை குறித்து கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சிகள் அளித்து வருகிறார். அதோடு, பிரத்யேகமாகப் பெண்களுக்கு இயற்கை விவசாய முறைகளையும் சொல்லிக் கொடுத்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் அழகாபுரியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது அக்கனாபுரம் கிராமம். இங்குதான் இருக்கிறது செந்தமிழ்ச் செல்வியின் ‘சதுரகிரி கானகம்’ எனும் தோட்டம். பசுமை விகடன் பெண் விவசாயிகள் சிறப்பிதழுக்காக அவரைச் சந்தித்தோம். 

“சொந்த ஊரு சிவகாசி. கல்லூரிப் படிப்பு மதுரையில். பத்திரிகை துறை, சமூக பணியில் முதுகலை முடிச்சுட்டு எம்.ஃபில்லும் முடிச்சேன். அப்புறம், மதுரையில் இருக்கிற தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் ‘இளவட்டம்’ங்கிற அமைப்பைத் தொடங்கி மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சேன்.
எனக்குச் சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ரொம்ப ஆர்வம். இளவட்டம் அமைப்புல இயக்குநரா வேலை செய்துட்டு இருந்தப்போதான், இயற்கை விவசாயம் பத்தி தெரிஞ்சுகிட்டேன். உடனே அதுல ஆர்வம் வந்து, நிறைய விஷயங்களைத் தேடித்தேடிப் படிக்க ஆரம்பிச்சேன். அப்போதான் நம்மாழ்வார் ஐயா பத்தித் தெரிஞ்சுகிட்டு, அவர் பேசுற கூட்டங்கள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். அப்புறம் நாங்க நடத்துன பல கூட்டங்களுக்கும் நம்மாழ்வார் ஐயாவை அழைச்சிட்டு வந்து பேச வெச்சேன். அது மூலமா இயற்கை விவசாயத்தை அவர்கிட்ட இருந்து கத்துகிட்டேன். அதுல எனக்கு இருக்கிற ஆர்வத்தைப் பார்த்து ஐயா ரொம்ப ஊக்கப்படுத்தினார். அப்போ எனக்குச் சொந்தமா நிலம் கிடையாது. இயற்கை விவசாயம் செய்யறதுக்காக நிலம் தேட ஆரம்பிச்சேன். மதுரையில் அப்பா எனக்குக் கொடுத்திருந்த வீட்டுமனையை வித்துட்டு அந்தப் பணத்துலதான் இந்த நிலத்தை வாங்கினேன். ‘மதுரை நகரத்துக்குள்ள இருக்கிற இடத்தை வித்துட்டு, யாராவது இந்த சீமைக் கருவேலங்காட்டை வாங்குவாங்களா?’னு சொந்தக்காரங்ககூட கேலி பண்ணுனாங்க. ஆனா, எனக்கு இயற்கை விவசாயத்துல இருந்த ஆர்வத்தால அதையெல்லாம் காதுல வாங்கிக்கவே இல்லை.
ஆரம்பத்துல வாங்கினது 9 ஏக்கர். மானாவாரி நிலம்தான். அதுல, 2 ஏக்கர் நிலத்தை வித்து, கிடைச்ச பணத்தை வெச்சு மீதி 7 ஏக்கர் நிலத்துல இருந்த மஞ்சணத்தி, சீமைக் கருவேல மரங்களை வெட்டி சுத்தம் செஞ்சேன். அப்புறம் மூணு வருஷம் பல தானிய விதைப்பு, ஆட்டுக்கிடைன்னு போட்டு மண்ணை நல்லா வளமாக்கினேன். 

2014-ம் வருஷம், முதன்முதலா ஒரு ஏக்கர்ல மானாவாரியில் குதிரைவாலி சாகுபடி செஞ்சேன். முழுக்க இயற்கை முறைதான். அதுல நல்ல மகசூல் கிடைச்சது. அதுல இருந்து தொடர்ந்து மானாவாரியா சிறுதானியங்களைச் சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்” என்று, தான் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்த கதையைச் சொன்ன செந்தமிழ்ச்செல்வி தொடர்ந்தார். 

“இப்போ ரெண்டு ஏக்கர் நிலத்தில 170 குமிழ், 150 தேக்கு, 200 வேம்பு கன்றுகளை நடவு செஞ்சிருக்கேன். மரக்கன்றுகள் நட்டு ஆறு மாசம் ஆகுது. ஐம்பது சென்ட் நிலத்துல சம்பங்கி, 50 சென்ட் நிலத்துல மல்லிகைப்பூன்னு சாகுபடியில இருக்கு. சம்பங்கியில ஒரு மாசமா, பூ அறுவடை கிடைச்சிட்டு இருக்கு. மல்லிகை இன்னும் பூக்க ஆரம்பிக்கலை. 

மூணு கலப்பின மாடுகள் வெச்சிருக்கேன், அதுக்காக ஒரு ஏக்கர் நிலத்துல கோ-4 தீவனப்புல்லும் அகத்தியும் போட்டிருக்கேன். மாடுகள்ல கிடைக்கிற பால் வீட்டுத் தேவைக்குத்தான். மீதி இருக்கிற பாலை பஞ்சகவ்யா தயாரிக்க உபயோகப்படுத்திக்குவேன். சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சு மரப்பயிர்களுக்கும் பூக்களுக்கும் மட்டும் பாசனம் பண்றேன். மானா வாரியாத்தான் சிறுதானியங்களைச் சாகுபடி செஞ்சிட்டிருக்கேன். 
போன ஆடிப்பட்டத்துல 3 ஏக்கர்ல தனித்தனியா வரகு, தினை, குதிரைவாலின்னு போட்டிருந்தேன். வரகுல ஊடுபயிரா பாசிப்பயறும் உளுந்தும் போட்டேன். தினையில தட்டை, மொச்சை விதைச்சிருந்தேன். எல்லாமே அறுவடையாகிடுச்சு.
60 கிலோ வரகு, 40 கிலோ குதிரைவாலி, 180 கிலோ தினை, 28 கிலோ பாசிப்பயறு, 19 கிலோ உளுந்து, 12 கிலோ தட்டைப்பயறு, 10 கிலோ மொச்சைனு அறுவடையானது. உளுந்து, பாசி, மொச்சை, தட்டைப்பயறை வீட்டுத்தேவைக்காக எடுத்து வெச்சிக்கிட்டேன். வரகு, குதிரைவாலி, தினை மூணையும் அடுத்தப் போக விதைப்புக்கு எடுத்து வெச்சிட்டு, மீதியை விதைக்காக வித்துடலாம்னு இருக்கேன். உள்ளூர் விவசாயிகளே கேட்டிருக்காங்க. ஒவ்வொரு முறையும் விதைக்கும் இடுபொருளுக்கும் செலவில்லை. இடுபொருள் தெளிக்கவும், அறுவடை பண்றதுக்கும் மட்டும்தான் செலவு. 

சம்பங்கியில் தினமும் அரைகிலோ அளவுக்குதான் பூ வருது. மல்லிகையும் மகசூலுக்கு வந்திடுச்சின்னா தினசரி வருமானம் கிடைக்க ஆரம்பிச்சிடும்” என்ற செந்தமிழ்ச்செல்வி நிறைவாக, “போன வருசம் ஆடி மாசம் மட்டும் ஒரு மழை கிடைச்சது. அதுக்கப்புறம் ஐப்பசி மாசம் வரை சுத்தமா மழையே இல்லை. ஆனாலும்,  இந்தளவுக்கு மகசூல் கிடைச்சிருக்கு. அதுக்குக் காரணம் அமுதக்கரைசலும் பஞ்சகவ்யாவும்தான். மூணு முறை இதைத் தெளிச்சதால செடிகள் கருகாம மகசூல் கிடைச்சிருக்கு. மழை கிடைச்சிருந்தா நல்ல மகசூல் எடுத்திருப்பேன். எங்க ஊர்லயே நிறைய பேர் நிலத்துல செடிகளெல்லாம் வறட்சியால கருகிப்போச்சு. அந்த வகையில் இயற்கை விவசாயம் செஞ்சதுல நான் தப்பிச்சுக்கிட்டேன். அதுதான் இயற்கை விவசாயத்தோட மகிமை” என்று பெருமிதத்துடன் சொல்லி விடைகொடுத்தார். 

No comments:

Post a Comment