Monday, 20 March 2017

இயற்கை மருத்துவம்

ரபரப்பான நவீன வாழ்க்கை, நமக்குத் தந்த நோய்கள் பல. மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்னைகள் முதல் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், தொப்பை, சர்க்கரைநோய், இதய நோய்கள், புற்றுநோய்... என நோய்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. கம்பஞ்சோறும், ராகிக்கூழும் உண்டுவிட்டு காட்டுக்குப் போய் மாங்குமாங்கெனப் பாடுபட்டு வந்த காலத்தில் நம் தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் இல்லாத நோய்கள் எல்லாம் இன்று நம்மை ரவுண்டுகட்டி அடிக்கின்றன. இதற்கு எல்லாம் என்ன காரணம்? மாடர்ன், ட்ரெண்ட், ஸ்டைல் என நம்பி, பழைய வாழ்க்கைமுறையில் இருந்த ஆரோக்கியமான விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டு புதியதன் பின்னால் ஓடியதுதான் காரணம். இப்போது, ‘ஆர்கானிக்குக்குத் திரும்புவோம்... பழைமைக்குத் திரும்புவோம்' என்ற குரல்கள் மெள்ள வலுப்பெற்று வருவதைப் பார்க்கிறோம். இதை, `ரிவர்ஸ் லைஃப்ஸ்டைல்’ (Reverse lifestyle) என்கிறார்கள்.

உணவு, உடற்பயிற்சி, உறக்கம் மூன்றுமே ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படையானவை. இவற்றை நல்வழியில் மாற்றி அமைப்பதன் மூலம் நலம் காணலாம். முதலில் உணவைப் பற்றிப் பார்ப்போம்.

* நாம் தினசரி உண்ணும் உணவு, நம் உடலுக்கு ஆற்றல் தருவதோடு, நம் உடலின் பெளதீகக் கட்டுமானத்துக்கு அடிப்படையானதாக இருக்கிறது. அதனால், ஏதோ சாப்பிட்டோம் என்று விட்டுவிட முடியாது. இயற்கையாக விளைந்த, ரசாயனக் கலப்பில்லாத காய்கறி, பழங்களையே இயன்றவரை பயன்படுத்த வேண்டும். தற்போது பல இடங்களில் இயற்கை வேளாண் பொருள்களுக்கான கடைகள் உள்ளன. இப்படித் தேர்ந்தெடுத்து உண்ணும்போது, உடலுக்குத் தீங்கான வேதிப்பொருள்கள் தடுக்கப்படுகின்றன. இதனால், உடல் உறுப்புகள் ஆரோக்கியம் பெறுகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. நீண்ட ஆயுளுக்கும், துடிப்பான உடல் செயல்பாட்டுக்கும் ஆர்கானிக் உணவுகள் அச்சாரம் இடுகின்றன.

* சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னரோ,  அரை மணி நேரத்துக்குப் பின்னரோ மட்டுமே தண்ணீர் பருக வேண்டும். இடையில் மிகவும் அவசியமானால், தண்ணீர் குடிக்கலாம்.  சாப்பாட்டுக்கு இடையில் அதிகமாகத் தண்ணீர் பருகுவது அஜீரணக்கோளாறுக்குக் காரணமாகும்.

* நம் பாரம்பர்ய முறைப்படி, நமது உடலுக்கு அரிசி உணவுகளைத் தவிர, பிற தானியங்களால் செய்யப்படும் உணவுகளும் மிக முக்கியம். குறிப்பாக கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை, வரகு, பனிவரகு, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை தினசரி உணவில் ஒரு வேளையாவது சேர்த்துக்கொள்வது நல்லது. இதில் முக்கியமான பிரச்னை என்னவென்றால், இந்தச் சிறுதானியங்களைக் கஞ்சியாகவோ, கூழாகவோ செய்தால் பெரியவர்கள் உண்பார்கள். ஆனால், குழந்தைகளை உண்ணவைப்பது மிகவும் கடினம். எனவே, அவர்களுக்குச் சிறுதானியங்களில் செய்யக்கூடிய பலகாரங்கள், சிற்றுண்டிகள் போன்றவற்றைச் செய்துகொடுக்கலாம்.

* உணவில் எந்த அளவு சிறுதானியம், அரிசி, கோதுமை இருக்கிறதோ, அதைவிட ஒரு பங்கு அதிகமாகக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் இருக்க வேண்டும். பல வண்ணக் காய்கறிகள், பழங்களில் தினசரி ஒரு வண்ணம் என உண்ணலாம். இதனால், அனைத்துப் பழங்கள், காய்கறிகளில் உள்ள பலன்களும் உடலுக்குக் கிடைக்கும்.

* பழங்களை நன்கு நீரில் கழுவியபின், அப்படியே கடித்துச் சாப்பிடுவதே நல்லது. இயன்றவரை பழச்சாறாக அருந்துவதைத் தவிர்க்கலாம். அப்படியே அருந்தினாலும், பால், சர்க்கரை, ஐஸ்கட்டி சேர்க்காமல் ஜூஸாக்கிச் சாப்பிடுவதே சிறந்தது. செயற்கையான பழச் சாறுகளில் பதப்படுத்திகள், சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது.  

* பாக்கெட்களில் அடைக்கப்பட்ட எந்த ஓர் உணவையும் எடுத்துக்கொள்ளவே கூடாது. இன்ஸ்டன்ட் மிக்ஸ், மசாலா பொடிகள், டப்பாக்களில் அடைத்த உணவுப்பொருள்கள் என அனைத்தையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

* உணவில் வெள்ளைச் சர்க்கரையைக் குறைத்துக்கொண்டு நாட்டுச்சர்க்கரை, பனை வெல்லம், தேன் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும்.

* முடிந்த அளவு வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, எண்ணெயில் பொரித்த பண்டங்களை வெளியில் உண்ண வேண்டாம். வீட்டில் ஆரோக்கியமான உணவுகளான சுண்டல், பயறு, உளுந்து வடை, எள் உருண்டை ஆகியவற்றைச் செய்து உண்ணலாம்.

* நம்முடைய உணவின் அளவு எப்போதுமே காலையில் அதிகமாகவும், மதியம் சற்றுக் குறைவாகவும், இரவில் அதைவிடக் குறைவாகவும் இருக்க வேண்டும். இரவில் இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகள் சிறந்தவை. மேலும், இரவு படுக்கச் செல்வதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும்.

* தண்ணீரை பிளாஸ்டிக் கோப்பைகளிலும் பாட்டில்களிலும் அடைத்துவைக்காமல், செம்புப் பாத்திரம், மண் கலயம் போன்றவற்றில் வைத்துக் குடிக்கவும். இது உடலுக்கு மிகவும் நல்லது.

* குறிப்பிட்ட சீஸனில் விளையும் காய்கறிகள், பழங்களைத் தவறாமல் சாப்பிட வேண்டும். சீஸன் அற்ற காலங்களில் கிடைக்கும் பழங்கள் இயற்கையான முறையில் இருப்பதற்கான வாய்ப்புக் குறைவு. எனவே, அவற்றை அளவாகச் சாப்பிடலாம்.

* வாரம் ஒரு முறை நோன்பு இருக்க வேண்டும். ஒன்றுமே சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பழங்களை மட்டுமோ காய்கறிகளை மட்டுமோ சாப்பிடலாம். மருத்துவரின் ஆலோசனை பெற்று நம் உடல்நிலைக்குத் தகுந்தவாறு நோன்பு இருக்க வேண்டும்.

ஓய்வும் உறக்கமும்

* நாம் உறக்கத்தைக் கண்டுகொள்வதே இல்லை. பலர் கடனே என்று உறங்குகிறோம். ஆனால், உறக்கம் நம் உடலுக்கு மிகவும் முக்கியம். நாம் உறங்கும் நேரத்தில்தான், நம் உடல் பல வேலைகளைச் செய்கிறது. உறக்கம் என்றால் எப்போது வேண்டுமானாலும் உறங்கக் கூடாது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை உறங்குவதுதான் சரியானமுறை. அந்த நேரத்தில்தான் உடலுக்குத் தேவையான அனைத்து வேலைகளும் நடைபெறுகின்றன.

* காலை 4 மணி, அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்னதாக எழுவது மிகச் சரியான பழக்கம். ஆனால், இன்றைய வாழ்க்கைமுறையில் இது  மிகவும் கடினமான ஒரு விஷயம். முடிந்த அளவு இரவு சீக்கிரம் உறங்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்க வேண்டும். தேவை இல்லாமல் டி.வி., மொபைல் ஆகியவற்றில் செலவிடும் நேரத்தை உறக்கத்தில் செலவிடலாம்.

* முந்தைய காலத்தில் இரவில் மிகவும் வெளிச்சமாக எதுவுமே இருக்காது. ஆனால், இன்று  நாமோ இரவில் டி.வி., மொபைல்போனைப் பார்க்கிறோம். நாம் உறங்கும் இடம் அமைதியாகவும் இருட்டாகவும் இருக்க வேண்டும். கண்களை உறுத்தாத, உறக்கத்தைப் பாதிக்காத  சிறு விளக்கு இருந்தால் மட்டும் போதுமானது.

உடற்பயிற்சி

* தினமும் காலை 4:00 - 6:00 மணி வரை நன்றாக வியர்க்கும் அளவுக்குக் கடினமான வேலையோ, உடற்பயிற்சியோ செய்ய வேண்டும். இன்றைய சூழலில் பலர் நண்பகல் 11:00 மணி அளவில் ஜிம்முக்குச் செல்கிறார்கள். இது முழுமையான பலனைத் தராது. அதிகாலையில் செய்வதுதான் சிறந்த உடற்பயிற்சி. 

* மாலையில் செய்வதானால், மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யலாம். கடினமாகச் செய்வதைத் தவிர்க்கவும்.

* நடைப்பயிற்சி செய்பவர்கள் பேசிக்கொண்டோ, பாடல்களைக் கேட்டுக்கொண்டோ செய்வதைத் தவிர்க்கவும். இது நடைப்பயிற்சியின் முழுமையான பலனைத் தராது.

* தினமும் சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும். முன்பு தினமும் காலையில் மாலையில் என பூஜைகளை இதற்காகத்தான் செய்தார்கள். கடவுள் நம்பிக்கை இருப்பின் பூஜைகளோ, இல்லாவிடில் தியானமோ செய்யலாம்.

இவை அனைத்தையும் தாண்டி, நாம் மறந்து போன மிக முக்கியமான வாழ்க்கைமுறைகளில் ஒன்று, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது. வெள்ளி செவ்வாய் பெண்களும், புதன், சனி ஆண்களும் வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இப்படிக் குளிப்பதன் மூலம் உடலில் ஏற்பட்டிருக்கும் சூடு குறைவதோடு, வாதம், கபம், பித்தம் ஆகியவை சமநிலையில் இருக்கும்.

Tuesday, 14 March 2017

ரூ 50ல் சேமிப்பு கணக்கு

ரூ 50ல் சேமிப்பு கணக்கு. இருக்கவே இருக்கு போஸ்ட் ஆபீஸ், இனி கொள்ளைக்கார வங்கி எதுக்கு? http://dhunt.in/24wBP?s=a&ss=com.google.android.apps.blogger via Dailyhunt

Sunday, 5 March 2017

புதிய முதலீட்டில் கலக்கும் பெண்கள்! - பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட்...

த்தனை காலமும் ஆண்களின் கோட்டையாக இருந்த பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் உலகில், இன்றைக்கு சில பெண்களும் புகுந்து, பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களில் சிலரைச் சந்தித்து, அவர்களின் அனுபவங்களைக் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.

‘‘ஃபண்ட் முதலீடு பற்றி பயப்படத் தேவையில்லை!’’

வள்ளியம்மை, காரைக்குடி. 

‘‘என் கணவர் வெளிநாட்டுல வேலை செய்றாரு. அவர் கஷ்டப்பட்டுச் சம்பாதிச்சு அனுப்புறதை எப்படி சிறப்பா சேமிக்கலாம்னு யோசிச்சப்பதான், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பத்தி தெரிஞ்சுகிட்டேன். போன வருஷம் மட்டும் பிர்லா, யூடிஐ, ஹெச்டிஎஃப்சி-னு மூணு நிறுவனங்களோட மியூச்சுவல் ஃபண்டுல முதலீடு பண்ணினேன். ஒரே நிறுவனத்தோட ஃபண்ட் திட்டங்கள்ல முழுப் பணத்தையும் முதலீடு பண்ணாம, ஒவ்வொரு நிறுவனம் நடத்துற சிறப்பான திட்டத்துலயும் மாதம் 1,000 ரூபாய் வீதம் ஒவ்வொரு மாதமும் முதலீடு செஞ்சுட்டு வர்றேன். குறைந்தபட்சம் அஞ்சு வருடங்களுக்கு இப்படி முதலீடு செய்யணும்னு திட்டமிட்டிருக்கேன். மியூச்சுவல் ஃபண்டுல இருக்கிற முக்கியமான வசதி என்னன்னா, இடையில நமக்கு பணம் தேவைப்பட்டா உடனே எடுத்துக்கலாம்.
இந்த ஃபண்ட் திட்டத்துல நாம முதலீடு பண்ணியிருக்கிற கம்பெனியோட பங்குகளோட விலை இறங்கினாலோ அல்லது பங்குச் சந்தை இறக்கம் கண்டாலோ, நாம செஞ்ச முதலீடு கொஞ்சம் குறையத்தான் செய்யும் என நாம புரிஞ்சுக்கணும். ஆனா, அஞ்சு வருஷம், பத்து வருஷம்னு தொடர்ந்து முதலீடு செஞ்சா, 10 சதவிகிதத்துக்கு மேலேயே வருமானம் கிடைக்கும். தவிர, முதலீடு செஞ்சுட்டுக் கண்ணை மூடிட்டு சும்மா இருந்துட முடியாது. அந்த ஃபண்ட் எப்படி செயல்படுது என்பதை மாசத்துக்கு ஒருமுறையாவது கவனிக்கணும். இதை எல்லாம் புரிஞ்சுகிட்டு செய்ய முடியுமான்னு பயப்படத் தேவையில்லை. சில மாசங்கள்ல அடிப்படை விஷயம் அத்தனையும் கத்துக்கலாம்.’’

“சம்பளத்துல 30 சதவிகிதத்தைச் சேமிக்கிறோம்!”

பிரேமா தீபக், மேனேஜிங் டைரக்டர், கடலூர்

“என் பையனுக்கு ஏழு வயசாகுது. அவனோட கல்லூரி செலவுகளுக்காக ‘பிர்லா சன் லைஃப்’ அப்புறம் ‘யூடிஐ’ திட்டங்கள்ல ரெண்டு வருஷமா முதலீடு செஞ்சுட்டு வர்றேன். என் அப்பா 35 வருஷமா மியூச்சுவல் ஃபண்டுலதான் முதலீடு பண்ணிட்டு இருந்தாங்க. அந்தப் பணத்துலதான் என் கல்யாணமே நடந்தது. அதனால மியூச்சுவல் ஃபண்ட் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். நானும் என் கணவரும் எங்களோட சம்பளத்துல 30 சதவிகிதத்தைச் சேமிக்கிறோம். அதுபோக, எப்பவெல்லாம் கையில பணம் வருதோ, அப்பவெல்லாம் அதை சேமிப்பா மாத்த வழி வகுத்திடுவோம். மியூச்சுவல் ஃபண்டுல நாம போட்ட தொகைக்கு லாபம் வருதோ இல்லையோ, போட்ட பணம் கைக்கு வந்திடும். வரிச் சலுகையும் கிடைக்கிறதுனால பயம் எனக்கு எப்பவும் இல்ல.”

‘‘பங்குச் சந்தையில 15 வருஷமா முதலீடு செய்கிறேன்!’’ 

உமா, சுய தொழில் செய்பவர், சென்னை

‘‘நான் பொருளாதாரம் தொடர்பா வர்ற பத்திரிகை செய்திகளைத் தொடர்ந்து வாசிப்பேன். அது எனக்குப் பிடிச்ச சப்ஜெக்ட். அதனாலேயே முதலீடு பண்றது எனக்கு ரொம்பப் பிடிக்கும். நகை, நிலம், ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்டுனு பல இடங்கள்ல முதலீடு பண்ணியிருக்கேன். 15 வருஷமா பங்குச் சந்தையில முதலீடு செஞ்சிட்டு இருக்கிறேன். ஆரம்பத்துல, குறுகிய காலத்துக்கு மட்டும் பங்குகளை வாங்கி, வித்துட்டு இருந்தேன். அப்புறம், அஞ்சு வருஷம், பத்து வருஷம்னு பங்குகளை வாங்கி வச்சிருந்தேன். என்னைப் பொறுத்த வரை, பங்குகள் மூலமா சின்ன லாபம் கிடைச்சாக்கூட போதும்னு நினைப் பேன். பங்குச் சந்தையில ரிஸ்க்னு பெரிசா ஒண்ணுமில்லை. நாலு, அஞ்சு வருஷமா மியூச்சுவல் ஃபண்டுல முதலீடு செய்றேன். நேரமும், ஆர்வமும் இருந்தா, யார் வேணா இந்த முதலீட்டைச் செய்யலாம்’’.

‘‘நீண்ட கால முதலீடே என் இலக்காக இருக்கு!’’

சுசித்தா, விளம்பரத் துறையில் வேலை செய்பவர், சென்னை

‘‘கொஞ்ச வருஷம் முன்னாடி நிலத்துல முதலீடு செய்யலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். அதுதான் பெரிய அளவுல லாபம் கொடுக்கும்னு நினைச்சேன். ஆனா, மியூச்சுவல் ஃப்ண்ட், ஷேர் மார்க்கெட் பற்றி கேள்விப்பட்டு, அதுல ஆர்வம் அதிகமாகி, அந்த முதலீடுகளைப் பற்றி நிறையா தெரிஞ்சுக்கிட்டேன். கடந்த ஒரு வருஷமா ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை பண்ணிட்டு இருக்கேன்.  எஸ்ஐபி திட்டம் மூலமாவும் குறிப்பிட்ட சில இலக்குகளுக்காக முதலீடு செய்றேன். 

பொதுவா, நான் முதலீடு செய்றது எல்லாமே வருங்காலத் தேவைகளை மனசுல வச்சுத்தான். குறைந்தபட்சமாக அஞ்சு வருஷத்துக்கு குறையாம முதலீடு செய்றதே என் முதலீட்டு கொள்கைன்னு சொல்லலாம். முதலீட்டு மூலமா வர்ற லாபத்தையும் கூட, பெரிய அளவுல முதலீடு செய்றதுதான் என் ப்ளான். இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும்; நிறைய முதலீடுகளைச் செய்யணும்!’’

என்ன பெண்களே, இந்த கில்லாடிகள் போல, நீங்களும் முதலீட்டிலும் இறங்கிக் கலக்கவேண்டியது தானே!  

கிளாக் ஸ்பீடு Clockspeed


புத்தகத்தின் பெயர்: கிளாக் ஸ்பீடு (Clockspeed)
ஆசிரியர்: சார்லஸ் ஹெச் ஃபைன் (Charles H. Fine)
பதிப்பாளர்: Basic Books (Revised edition)
ந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது  சார்லஸ் ஹெச் ஃபைன் எழுதிய ‘கிளாக் ஸ்பீடு’ என்னும் புத்தகத்தை. அதிவேகமாக இயங்கும் இன்றைய உலகில் கிடைக்கும் தற்காலிக அனுகூலங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு தொழில் துறையை முழுவதுமாகக் கட்டுப்படுத்தி, வெற்றி பெறுவது எப்படி என்பதை இந்தப் புத்தகம் சொல்கிறது. 

வரலாற்று ரீதியாக மனிதர்களின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றால், ஒன்று அல்லது இரண்டு தலைமுறையில் மனிதர்களிடையே நடந்த மாற்றங்களை ஆய்வுசெய்ய வேண்டும். ஈக்களின் வாழ்நாள் குறைவு என்பதால், நிறைய ஈக்களின் தலைமுறையை ஆராயவேண்டும். யானைகள் பற்றி ஆராயவேண்டும் எனில்,  ஆண்டுக்கணக்கில் காத்திருக்கவேண்டும். இதே போல்தான், தொழில் துறையைப் பற்றி ஆராய வேண்டுமெனில், பல நிறுவனங்களை உன்னிப்பாக கவனிக்கவேண்டும் என்று ஆரம்பிக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். 

இன்றைய சூழ்நிலையில், ஒவ்வொரு தொழில் துறையின் கடிகாரமும் (‘கிளாக் ஸ்பீடு’) ஒவ்வொரு வேகத்தில் இயங்குகிறது. அனைவருக்கும் பொதுவானதுதானே கடிகார வேகம் என்று நீங்கள் சொன்னால், அது உண்மை இல்லை. ஒவ்வொரு தொழிலும் காணும் வளர்ச்சி மற்றும் மாறுதல்களின் வேகத்தைக் குறிப்பது இந்தக் கடிகார வேகம். இதைப் புரிந்துகொள்ள ஒவ்வொரு தொழிலையும் கொஞ்சம் கூர்ந்து பாருங்கள். ஒவ்வொரு தொழில் துறையும் வளர்ந்துவந்த வேகத்தைப் பாருங்கள். அது செய்யும் பொருள்களில் ஏற்பட்ட மாறுதல் களில் இருக்கும் வேகம் (காலம் நகரும் வேகம் – ‘கிளாக் ஸ்பீடு’), அந்தப் பொருள்கள் செய்யப்படும் பிராசஸில் ஏற்படும் மாற்றத்தின் வேகம், நிர்வாகங்களில் ஏற்படும் வேகம் போன்றவற்றையே தொழில்களின் தனிப்பட்ட வேகம் என்கிறோம். சினிமா என்ற பொழுதுபோக்குத் துறை வளர்ந்த வேகமே அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் காணப்பட்ட அதிவேகமான வளர்ச்சி ஆகும்.  

சினிமா எடுக்கும் நடைமுறைகளும் வேகமான மாறுதல்களைச் சந்தித்து வருவதுடன், சினிமா வியாபாரம் செய்யப்படும் நடைமுறைகளும் வேகமாக மாறி வருகின்றன. சினிமாத் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்பத் துறையிலும் பல மாற்றங்கள் வந்து நம்மை அசத்திக் கொண்டிருக்கின்றன. 

‘கிளாக் ஸ்பீடு’ என்னும் நடைமுறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய நிறுவனமான இன்டெல் தயாரிக்கும் மைக்ரோ பிராசஸர்களுக்கு எத்தனை நாள் வாழ்நாள்களாக இருக்கிறது? பென்ட்டியம் II பிராசஸர்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரையே சந்தையில் புழங்கின. அதற்குள் பல பில்லியன் டாலர்களைச் செலவு செய்து, அதிவேகத்துடன் கூடிய பிராசஸர்களை அறிமுகப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருந்தது இன்டெல் நிறுவனம்.  
புதிய பிராசஸர்களுக்காகச் செலவு செய்த பணத்தை விடுங்கள். பழைய பிராசஸர்களுக்கு (அதை உருவாக்குவதற்கான டெவலப்மென்ட் செலவுகள்) செலவு செய்த பணமும் வீண்தானே?   பில்லியன் டாலர் கணக்கில் செலவு செய்து  உருவாக்கப்பட்ட பொருள் ஒன்று வழக்கற்று போய்விடுகிறது. நான்கு வருடத்துக்குள், போட்ட முதலீடு அனைத்தையும் எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இன்டெல் இருக்கிறது.   

ஆட்டோமொபைல் நிறுவனங்களைப் பாருங்கள். கார், ட்ரக் போன்றவற்றின் மாடல்களுக்கான குறைந்தபட்ச ஆயுட்காலம் நான்கு முதல் எட்டு வருடங்களாக இருக்கிறது. அதாவது, நான்கு முதல் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பழைய மாடல்களை நிறுத்தி, அதற்குப் பதிலாக புதிய மாடல்களை அறிமுகப் படுத்துகின்றன. இந்தத் துறையில் பிராசஸ் மாறுதல்களுக்கு, கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஆகின்றன. அதாவது, கார் இன்ஜின்களானது இருபது வருடங்கள் வரையில் பெரிய மாறுதல்கள் ஏதும் செய்யப்படாமலேயே இருக்கின்றன.  

இருப்பதிலேயே மிகக் குறைந்த ‘கிளாக் ஸ்பீடு’ இருக்கும் தொழில்துறை, விமானத் துறைதான்.  முப்பது வருடங்களுக்கு எந்த ஒரு பெரிய மாறுதலும் அதில் வந்துவிடாது. 747 ஜம்போ ப்ளேன்கள் தயாரிக்கப்பட்டு முப்பது வருட காலத்துக்குப் பின்னரும் அவற்றின் விற்பனையின் மூலம், கணிசமான லாபத்தை அந்த நிறுவனம் சம்பாதித்து வருகிறது.

எது வேகமான மாறுதல்களை ஒரு தொழில் துறையில் கொண்டுவருகிறது என்று யோசித்தால், இரண்டே விஷயங்கள் பிடிபடும்.  தொழில் நுட்பத்தில் வரும் நூதனங்கள் மற்றும் அதிகபட்ச போட்டி ஆகிய இரண்டுமே வேகமான மாறுதல்களை, ஒரு தொழில் துறையில் கொண்டு வந்துவிடுகின்றன. எந்தவொரு தொழிலிலும் ஒரு முக்கியமான புத்தாக்கம் வரும்பட்சத்தில் ‘கிளாக் ஸ்பீடு’ அதிகரிக்கிறது. அப்படி என்றால், ‘தொழில் நுட்பத்தில் மாறுதலே வராத தொழிலில் ‘கிளாக் ஸ்பீடு’ அதிகரிக்காதா?’ என்று கேட்பீர்கள். தொழில் நுட்பத்தில் மாறுதலே வராத ஒரு தொழிலில் போட்டி, அளவுக்கு அதிகமாக அதிகரிக்கும் போது ‘கிளாக் ஸ்பீடு’ அதிகரிக்கவே செய்யும்.
‘கிளாக் ஸ்பீடு’ அதிகரிக்க அதிகரிக்க, அந்தத் தொழில் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு தற்காலிக அனுகூலங்கள் மட்டுமே கிடைக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளில் சரியானதொரு அனுகூலத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலமே வெற்றிகளைக் குவிக்க முடியும். ‘எங்கள் நிறுவனத்துக்கு  இந்த செயல் வல்லமை இருக்கிறது... அந்த செயல் வல்லமை இருக்கிறது’ என்று வாய் கிழிய சொல்லிக்கொண்டே இருக்கலாமே தவிர, எந்தவொரு வல்லமையும் எந்தவொரு  நிறுவனத்துக்கும் தொடர்ந்து பல ஆண்டு காலமாக நிரந்தரமாக இருப்பதே இல்லை.   சொல்லப்போனால், ‘நாங்கள் இதில் வல்லமை வாய்ந்தவர்கள். அதனால் தான் ஜெயிக்கிறோம்’ என்று நிறுவனங்கள் சொல்வதே தவறு. இருக்கும் தொழிலில் செய்ய வேண்டிய அனைத்தையும் சரியான விகிதாச் சாரத்தில் செய்தால் மட்டுமே தொடர் வெற்றி என்பது நிச்சயம். 

ஒரு செயினின் வலிமை என்பது, அதில் இருக்கும் வளையங்களில் எது குறைந்த வலுவைக் கொண்டதோ, அந்த அளவே இருக்கும் என்பது பழமொழி. இதுவே தொழில்களுக்கு பொருந்தும். ஒரு நிறுவனத்தின் செயல்பாடு என்பதும் ஒரு செயினைப் போன்றதே. அனைத்துத் துறைகளும் சரியான பலத்துடன் இல்லாவிட்டால், வெற்றி என்னும் சங்கிலி அறுந்து போய்விடவே வாய்ப்பு அதிகம். 

‘கிளாக் ஸ்பீடு’ நடைமுறைப்படி, ஆராய்ச்சி செய்து வல்லமையைக் கூட்ட நினைத்தால், ஒரு நிறுவனம் என்ன செய்ய வேண்டும்? ஒரு நிறுவனத்தின் பல்வேறு அங்கங்களையும் ஆராய்ந்து, அந்த செயினில் எந்த இணைப்பு பலவீனமாக இருக்கிறது என்று பார்த்து, அந்த லிங்க்கை மட்டும் சரிசெய்தாலே போதும் என்று இருந்துவிடக் கூடாது. 

வேகமான ‘கிளாக் ஸ்பீடு’ கொண்ட உலகத்தில், வெற்றி பெறுவதற்கான அனுகூலம் என்பது தற்காலத் தேவைக்கான  பொருள்கள், பிராசஸ் மற்றும் தகுதிகளைக் கொண்டிருப்பதிலேயே இருக்கிறது என்கிறார் ஆசிரியர். தற்காலத்துக்குத் தகுந்தாற் போன்ற பொருள்களைத் தயாரிப்பது என்றால் எப்படி சாத்தியம்? மேலும், ஃபேக்டரி, முதலீடு போன்றவற்றுக்கு எங்கே போவது என்கிறீர்களா? 

ஈக்களைப் போன்ற வாழ்நாள்கள் குறைவாகக் கொண்ட தயாரிப்புகள் இருக்கும் இந்தக் கால கட்டத்தில், தொழிற்சாலைக் கட்டுவது என்பது எல்லாம் நடக்கிற காரியம் இல்லை. பொருள்களை செய்வதற்கான திறனை அவுட்சோர்ஸிங் முறையிலும், அதற்குத் தேவையான அறிவை சொந்தமாகவும் வைத்திருப்பதே நல்லது. 

ஐயோ, இது ரொம்ப கஷ்டமாச்சே. என் தொழில் பரந்து விரிந்து பெரியதாக இருக்கிறதே. எப்படி இதில் போய் ‘கிளாக் ஸ்பீடு’ முறையை அறிமுகப்படுத்துவது என்று கவலைப்படுகிறீர்களா? அதற்காக புதியதாக நிறுவனம் தொடங்கத் தேவை இல்லை. தற்போது கையில் இருக்கும் நிறுவனத்திலேயே இந்தக் கருத்தாக்கத்தை இணைத்து செயல்படுத்த முடியும் என்கிறார் ஆசிரியர்.

தொழிலில் வெற்றி என்பதே, தேவையான தகுதிகளை வடிவமைத்து லாபத்தை சம்பாதிப்பதாகும். அதே நேரத்தில், தொழிலில் அதிகரிக்கும் ‘கிளாக் ஸ்பீடு’க்கு ஏற்றாற்போல் வேகத்தை மாற்றி அமைத்துக்கொள்வதிலேயே வெற்றி இருக்கிறது என்று முடிக்கிறார் ஆசிரியர். 

நிறைய நிஜ வாழ்க்கை உதாரணங்களுடன் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை, தொழில் முனைவோர் அனைவரும் நிச்சயம் படிக்கலாம்.

Saturday, 4 March 2017

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 38

ம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி, ஆர்.குமரேசன்

வ்வளவு உன்னதமான செயலாக இருந்தாலும், அந்தச் செயலை மேற்கொள்வோரின் சிந்தனையில் நேர்மை இருக்க வேண்டும். மாறாக, புறத்தோற்றத்தில் ஒழுங்கும் சிந்தனையில் ஊழலும் இருந்தால், அவை தீய விளைவுகளைத்தான் கொண்டுவரும். இயற்கை வேளாண்மையின் சந்தை, இவ்வாறான இடருக்குள் நுழைந்துவருகிறது. ஆர்கானிக் (organic) எனும் சொல், ஏதோ ஒரு மந்திரம்போல மாறிவிட்டது. நாட்டில் இயங்கும் ஆர்கானிக் கடைகளின் எண்ணிக்கையைப் பார்க்கையில் மலைப்பாக உள்ளது. இந்தக் கடைகளில் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ந்துவரும் மாற்றம் ஒன்று, நமது சமூகத்தால் முறையாக உள்வாங்கப் படவில்லை என நினைக்கிறேன்.

சர்வதேச ஆர்கானிக் சான்றிதழ், இந்திய அளவிலான ஆர்கானிக் சான்றிதழ் போன்ற முத்திரைகளுடன்கூடிய உணவுப்பொருள்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துள்ளது. ஓர் இயற்கை உழவர், தனது உளுந்து மூட்டையுடன் இவ்வாறான கடைகளுக்குச் சென்று விற்பனை செய்வதற்கும், ‘சான்றிதழ் பெற்றது’ எனும் முத்திரையுடன் வந்துசேரும் பொருள்களுக்கும் போட்டி தொடங்கிவிட்டது. இந்தப் போட்டியில் பெரும்பாலான நேரங்களில், இயற்கை உழவர் பின்னுக்குத் தள்ளப்படுகிறார். காரணம், அவரிடம் சான்றிதழ் இல்லை. இது கடைக்காரர்களின் குற்றம் என நான் நினைக்கவில்லை. மக்களின் கருத்தில் உள்ள சிக்கல். இந்தச் சிக்கலைப் பற்றி உங்களோடு உரையாடுவது என்னைப் போன்றோருக்கு இருக்கும் முக்கியக் கடமை.

ஆர்கானிக் எனும் சொல்லுக்கு ‘உயிர்மம்’ எனப் பொருள். ஆர்கானிக் விளைபொருள் என்பது, உயிர்ம விளைபொருள் ஆகும். செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் இல்லாத அனைத்து விளைபொருள்களும் உயிர்மப் பொருள்கள்தான் என்பது இப்போதைய பொதுவான புரிதல். நமது நாட்டில் உள்ள சட்ட நடைமுறைகளின்படி, ‘இது உயிர்ம விளைபொருள்தான்’ எனச் சான்று அளிக்கும் சட்ட அமைப்பு இல்லை. ஆனால், ‘இந்த நிலம் உயிர்ம நிலம். இங்கே வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுவது  இல்லை’ எனச் சான்று அளிப்பதை அரசு ஒப்புக்கொள்கிறது. இந்த வேறுபாட்டை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். `குறிப்பிட்ட உணவு உயிர்மத்​தன்மைகொண்டது எனச் சான்று அளிப்பது இல்லை. இந்தப் பொருள் விளைந்ததாகக் கூறப்படும் நிலம் உயிர்மத்​தன்மையுடையது’ எனச் சான்று அளிக்கப்​படுகிறது.

ஒரு கடையில் நீங்கள் காணும் உணவுப்பொருள், ‘ஆர்கானிக் சான்றிதழ் பெற்றது’ எனக் குறிப்பிடப்பட்டால், அந்த உணவுக்கான சான்றிதழ் அல்ல; அது விளைந்ததாகக் கருதப்படும் நிலத்தின் சான்றிதழ். இந்தப் புரிதலுடன், மேற்படி சான்றிதழ் பொருள்களைப் பார்வையிடுங்கள். அவை அனைத்தும் இயற்கை வேளாண்மை செய்யும் உழவர்கள் அனுப்பிய பொருள்களா என்ன? அவற்றில் மிகப் பெரும்பாலானவை, பெருநிறுவனங்கள், ஆன்மிக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் விளைபொருள்கள். எனில், இந்த நிறுவனங்கள் அனைத்தும் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுக்கொண்டிருக்க வேண்டும். இந்தியா முழுமைக்கும் உள்ள பல்லாயிரம் கடைகளுக்கும் இந்த நிறுவனங்கள் தமது உணவுப்பொருள்களைத் தங்குதடையின்றி அனுப்பிக்கொண்டே இருக்கின்றன. இப்போதுள்ள நிலைமையைப் பார்த்தால், ஒவ்வொரு நிறுவனமும் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில், இடைவிடாமல் இயற்கை வேளாண்மை செய்துகொண்டிருக்க வேண்டும்.

இந்தியாவில் இவ்வளவு அதிகமான இயற்கைப் பண்ணையங்கள் இல்லை. இதைக்காட்டிலும் முக்கியமான தகவல், சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் எல்லாம் நேரடியாக இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவதும் இல்லை. என்ன நடக்கிறது எனில், பெருநிறுவனங்களும் மேற்படி ஆன்மிக, தொண்டு நிறுவனங்களும் பல லட்சம் விவசாயிகளைத் தமது ஒப்பந்தக்காரர்களாக மாற்றிக்கொண்டுள்ளன. ஒருவர் இயற்கை வேளாண்மைக்குத் திரும்புகிறார் எனில், அவரது நிலத்தை இந்த நிறுவனங்கள் தம் பொறுப்பில் எடுத்துக்கொள்கின்றன. அந்த விவசாயிக்குக் கடன் / முன்பணம் கொடுத்து, அவரது விளைபொருள்களை முழுவதும் தம்மிடம் மட்டும் விற்பனைசெய்யும்படி ஒப்பந்தம் செய்துகொள்​கின்றன.

இப்போதுதான் நமது விவசாயிகள் சற்றே நிம்மதியாக மூச்சு விடுகிறார்கள். பன்னாட்டு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி நிறுவனங்கள், விதை நிறுவனங்கள் பிடியில் சிக்கிக் கடனாளியான பெரும்கூட்டம் நமது உழவர் சமூகம். ஆயிரக்கணக்கானோர் கடன் தொல்லையால் இறந்துவருகின்றனர். லட்சக்கணக்​கானோர் விவசாயத்தைவிட்டே வெளியேறி ஓடிக்கொண்டிருக்​கிறார்கள்.

ஐயா நம்மாழ்வார் போன்றோர் மேற்கொண்ட தன்னலமற்ற முயற்சிகளால், தமிழக வேளாண்மை இப்போது தலைநிமிரத் தொடங்கியுள்ளது. பொதுச்சமூகம், நஞ்சு உணவுகளால் நோய்களுக்கு ஆட்பட்டு பெரும்துயரங்களைச் சுமக்கிறது. `முழுமையாக இல்லை என்றாலும், ஓரளவுக்காவது இயற்கை விளைபொருள்கள் சந்தைக்கு வரத் தொடங்கிவிட்டன’ என்ற நிலைமையால், சமூகம் இப்போதுதான் நிம்மதி அடைந்துவருகிறது. இந்தச் சூழலில், மேற்படியிலான நிறுவனங்களும் ஆன்மிக/தொண்டு அமைப்புகளும் இயற்கை உணவுகளை முற்றும் முழுதான வணிகமாக மாற்றத் தொடங்கிவிட்டன.

உயிர்ம வேளாண்மை என்ற கருத்து அழுத்தமாக முன்னேற்றம் பெற்றபோது, தமிழகத்தில் செயலாற்றிய பல்வேறு இயற்கைத் தொண்டர்களும் ஐயா நம்மாழ்வாரும், முக்கியமான ஒரு சொல்லைக் கட்டமைத்தனர். எல்லோரும் ஆர்கானிக் எனும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இந்தச் சொல்லை வணிகமாகப் பயன்படுத்துவதற்கு என, சர்வதேச நடைமுறைகள் ஏராளமாக உள்ளன. அவை அனைத்தையும் தமிழக இயற்கை உழவர்களால் கடைப்பிடிக்க முடியாது. ஆனாலும், மாறிவரும் இந்தச் சூழலில் நமது இயற்கை உழவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலைமையைப் பற்றிய கலந்தாய்வு நடைபெற்றது.

விளைவாக, ‘இயற்கைவழி விளைபொருள்’ எனும் சொல்லை ஐயா நம்மாழ்வார் அறிவித்தார். தற்சார்பு வேளாண் வல்லுநர் பாமயன், இந்தச் சொல்லைக் கட்டமைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். இப்போதும் அவரது அமைப்பினர் ‘இயற்கை வழி வேளாண்மை’ எனும் சொல்லைத்தான் பயன்படுத்திவருகின்றனர்.

‘ஆர்கானிக்’ எனும் சொல்லுக்கும் ‘இயற்கைவழி விளைபொருள்’ எனும் சொல்லுக்கும் உண்மையில் வேறுபாடுகள் இல்லை. ஆனால், இந்தச் சொற்களைக் கையாள்வதில் உள்ள நடைமுறைகளும் இந்தச் சொற்களின் பின்னால் இருக்கும் வணிகச் சிந்தனைகளும் முற்றிலும் வேறு வேறானவை. 

ஆர்கானிக் சான்றிதழ்களை வழங்குவதற்கு என பல முகமைகள் (Agencies) இயங்கிவருகின்றன. தம்மிடம் வரும் உழவர்களது நிலங்களைச் சோதனைசெய்து, சான்றிதழ் பெற்றுத்தருவது இவற்றின் தொழில். ஒரு ஏக்கருக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால், உடனடியாகச் சான்றிதழ் வழங்கும் அமைப்புகளும் நிறைய உள்ளன. `சர்வதேசச் சான்றிதழ்’ எனும் பகட்டான விளம்பரங்களின் பின்னால் இவ்வாறான இழிவுகள் ஒளிந்துள்ளன. 

ஆர்கானிக் எனும் வணிகச் சின்னப் பொருள்களை விற்பனை செய்யும் பல கடைக்காரர்களுக்கு, இந்த நிலைமைகள் தெரியாது. அவர்கள் இது குறித்துச் சிந்திக்கவும் செயலாற்றவும் வேண்டும் என்பதற்காகவும், இந்தச் சிக்கலை நான் பதிவுசெய்கிறேன்.

நிலத்துக்குத்தான் உயிர்மச் சான்றிதழ் தரப்படுகிறது என்ற ஓர் உண்மையை நன்றாகப் புரிந்துகொண்டால், உங்களால் பல சதிகளை இனம்காண முடியும். `ஒரு நிலம் உயிர்மத் (ஆர்கானிக்) தன்மைகொண்டது’ என்று சர்வதேச அல்லது இந்தியச் சான்றிதழ் பெற்றுவிட்ட அடுத்த நாளே, வேதி நஞ்சுகளை நிலத்தில் பயன்படுத்தினால், அதைக் கேள்வி கேட்கவோ கண்காணிக்கவோ மக்களாகிய நமக்கு என்ன உரிமை இருக்கிறது? `இது சான்றிதழ் பெற்ற ஆர்கானிக் உணவுப்பொருள்’ என விளம்பரப்படுத்துவோரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுப்பாருங்கள். `வேண்டுமானால், எங்களது பொருளை ஆய்வகத்தில் சோதித்துப்​பாருங்கள்’ என அவர்கள் கூறலாம். அப்படி எத்தனை பொருள்களை நாம் ஆய்வகத்துக்கு அனுப்பிக்கொண்டே இருப்பது? 

அவர்களது எல்லா விளக்கங்களும் வந்துசேரும் இடம் – நம்பிக்கை என்பதுதான்!

நம்பிக்கை, நமக்குத் தேவையான பண்புதான். ஆனால், யாரை நம்புவது என்பதுதான் நமது கேள்வி. சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தை இந்தச் சமூகத்து மனிதர்களில் பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நிறுவனங்களை நடத்துவோர், அவற்றின் சோதனைக் குழுவினர், தரக்கட்டுப்பாட்டுக் குழுவினர் என எவரையும் தெரியாது. ‘இது ஆர்கானிக் உணவு’ என வணிக முத்திரை பதிக்கும் பெருநிறுவனம் வேறு, சான்றிதழ் தரும் நிறுவனம் வேறு. 

எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த உணவுப் பொருளை விளைவிக்கும் உழவர்கள் வேறு வேறானவர்கள். அவர்களிடம் ஒப்பந்தம் போட்டு, கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் வேறு வேறானவை. இவ்வளவு மோசமான வணிகச் சங்கிலியில் யாரை நம்புவது?

சில ஆன்மிகவாதிகளுக்குச் சிக்கல் இல்லை. தமக்கான மதகுருவின் முகத்தைப் பார்த்தால் போதும். அவரது முகத்தைத் தாங்கிவரும் எல்லா பொருள்களும் வானில் இருந்து இறக்குமதியாகும் புனிதங்கள் என்ற வகையில் ஒப்புக்கொள்வார்கள். அது அவர்கள் விருப்பம். பெரும்பான்மைச் சமூகத்தின் பிரதிநிதியாக, எந்த வணிகச் சின்னத்தையும் நம்பாமல், உண்மையை நாடும் மனிதர்களில் ஒருவனாக நான் கேட்பது, இந்தச் சான்றிதழ்களுக்கும் நம்பிக்கைக்கும் என்னதான் உறவு?

இதைவிட முக்கியமான கேள்வி, `இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் உழவர்களை வணிக நிறுவனங்களுக்கு அடகுவைக்கும் பாவத்தை இந்தச் சமூகம் செய்யப்போகிறது?’ என்பதுதான். இயற்கைவழி விளைபொருள்கள் எல்லாம் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றால், நமது கிராமங்களில் சத்துணவு உண்ணும் பிள்ளைகளும், ரேஷன் கடைகளில் காத்துக்கிடக்கும் பெரும்கூட்டமும் எந்தக் காலத்தில் நஞ்சில்லா உணவைச் சுவைக்க முடியும்? இப்போதே, நமது இயற்கை உணவில் அவர்களுக்கும் பங்கு தர வேண்டும். அதற்கான செயல்திட்டங்களில் ஓரளவு செல்வம்கொண்டோர் ஈடுபட்டாக வேண்டும். இந்நிலையில், நிறுவனங்களின் பகட்டுகளை ‘ஆர்கானிக்’ என்ற ஒற்றைச் சொல்கொண்டு நியாயப்படுத்தினால், எதிர்காலம் பாவக்குழியில் நம்மைத் தள்ளிவிடும்.

இயற்கை வேளாண்மை என்பது தொழில்நுட்பம் அல்ல - அறம். ஆம்... நிச்சயமாக இயற்கை வேளாண்மைத் தொழில்நுட்பம் அல்ல – நியாயம், மனிதநேயம், இயற்கை மீதான அக்கறை ஆகியவற்றின் கலவை. அதுதான் தமிழர்களின் மரபில் ஊறிக்கிடக்கும் அறம். 

இயற்கை வேளாண்பொருள்களை விற்பனை செய்யும் பல்லாயிரம் கடைக்காரர்களும் இந்த அறச்சிந்தனையுடன், தமது பொருள் இழப்புகளையும் கடந்து களத்தில் நிற்கிறார்கள். ஒருசிலர், இயற்கை உணவுகளைத் தமது பேராசைகளுக்கான பண்டமாக மாற்றுகிறார்கள். அவர்களைப் பற்றி கவலையுற வேண்டாம். அறம் மீறினால், அறமே கூற்றாகும்.

இயற்கைவழி உழவர்களைச் சந்தியுங்கள். இயற்கைவழி உணவுப்பொருள் அங்காடி நடத்துவோரிடம் உங்கள் ஐயங்களைக் கேட்டுத் தெளிவுபெறுங்கள். 

சோதனைச் சாலைகளுக்கும் நிலத்துக்குமான உறவை அறுத்தெறிவதுதான் உண்மையான இயற்கைவழி வேளாண்மை. இப்போதுள்ள சான்றிதழ் நடைமுறைகள் மீண்டும் பெருநிறுவனங்களின் சோதனைச் சாலைகளுக்குள் நமது நிலங்களை அடைத்துக்கொண்டுள்ளன. 

`இயற்கைவழி விளைபொருள்கள்’ எனும் அந்த அருமையான சொல்லைப் போற்றி வளர்த்தெடுங்கள். சான்றிதழ்களை அல்ல, நேரடியாக மனிதர்களை நம்புங்கள். ஆய்வுகளிலும் பகட்டான சொற்களிலும் உண்மை இருப்பதில்லை. அது ஒவ்வொருவரின் மனதில் பொதிந்துள்ளது. 

இறைச் சிலை மீது படிந்திருந்த சிலந்திவலையை அகற்றுவதற்காக வாயால் ஊதினாள் ஒரு பெண். அவள் வாயில் இருந்து எச்சில் சிலை மீது தெறித்தது. உடன் வந்த அந்தப் பெண்ணின் கணவர் தீவிர சிவத்தொண்டர். மனைவி மீது கோபம்கொண்டார். அவரது கனவில் தோன்றிய இறைவனது உடலில், எச்சில்பட்ட இடங்கள் செழுமையாக இருந்தன; எச்சில் இல்லாத இடங்கள் புண்பட்டிருந்தன. இது திருநீலநக்கநாயனார் வரலாறு.

புறத்தோற்றங்களைக் கண்டு நான் மயங்குவதில்லை; உங்கள் உள்ளார்ந்த சிந்தையில் உறைந்திருக்கிறேன் என்பது நமது இறை மரபுப் பாடம். 

பனியில் விளையும் மொச்சை... - பாரம்பர்யம் தரும் ‘பலே’ விளைச்சல்

பனியில் விளையும் மொச்சை... - பாரம்பர்யம் தரும் ‘பலே’ விளைச்சல்


மிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பயறு வகைகள், சிறுதானிய வகைகள் ஆகியவற்றை மானாவாரி முறையில்தான் சாகுபடி செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் பொதுவாக, தென்மேற்குப் பருவ மழையை நம்பி ஆடிப்பட்டத்தில் மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் புரட்டாசிப்பட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை நம்பியும் மானாவாரி சாகுபடி நடந்துவருகிறது. இப்பட்டத்தில் பனியில் விளையக்கூடிய மொச்சை, கொண்டைக்கடலை ஆகியவற்றைப் பெரும்பாலானோர் சாகுபடி செய்வார்கள். அந்த வகையில், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்துள்ள பணிக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி காவேரியம்மாள், பட்டம் தவறாமல் மொச்சை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரு மாலை நேரத்தில் மொச்சையைப் பறித்துக்கொண்டிருந்த காவேரியம்மாளைச் சந்தித்த போது மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார். “எங்களுக்கு மொத்தம் 6 ஏக்கர் நெலம் இருக்கு. கிணத்துப் பாசனத்துல 4 ஏக்கர் நஞ்சைப் பூமியும், மானாவாரியா 2 ஏக்கர் மேட்டுக்காடும் இருக்கு. ரெண்டுமே பங்கமில்லாத வெளைச்சல் கொடுக்கிற வளமான செம்மண் பூமி. மானாவாரி சாகுபடி நிலத்துல மாசி, பங்குனி மாசங்கள்ல கிடைபோட்டு வெச்சிடுவோம். சித்திரை மாசத்துல புழுதி உழவு ஓட்டி வெச்சிடுவோம்.

எங்க பகுதியில் ஆடிப்பட்டத்துல மானாவாரியா ராகி, சோளம், கம்புனு தானிய வெள்ளாமைதான் செய்வோம். அதுல அறுவடை முடிஞ்சதும் ஏக்கருக்கு 10 டன் தொழுவுரத்தைக் கொட்டி ஆழமா ரெண்டு தடவை உழுது வைப்போம். அப்புறமா புரட்டாசிப்பட்டத்துல நாட்டு மொச்சை  (இப்பகுதியில் ‘காட்டவரை’ என்று அழைக்கிறார்கள்) விதைப்போம். மானாவாரி வெள்ளாமைங்கிறதால பாத்தி, வரப்புன்னு அமைக்கிற வழக்கம் இல்லை. மழை கிடைச்சவுடனே அரை அடிக்கு ஒரு விதைன்னு உழவு சால்ல மொச்சையை விதைச்சு விட்டுடுவோம். ஏக்கருக்கு 4 கிலோ அளவு விதை விதைப்போம். அந்த மாசத்துல கிடைக்கிற மழையிலேயே பயிர் பிடிச்சு வளந்திடும். களை வந்தா பிடுங்குறதோட சரி. வேற எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. கிடைக்கிற மழை, பனியிலேயே மொச்சை நல்லா வளந்து வந்துடும். தை மாசம் அறுவடை பண்ணிடுவோம்” என்று தனது மானாவாரி சாகுபடி அனுபவங்கள் குறித்துப் பேசிய காவேரியம்மாள் தொடர்ந்தார்.
“காட்டவரை பருப்பை பச்சையாவும் சமைச்சும் சப்பிடலாம். காய வெச்சு இருப்பு வெச்சும் பயன்படுத்தலாம். இதுல தோலை நாம சாப்பிட முடியாது. முத்தின காய்களைக் களத்துல கொட்டி வெயில்ல நல்லா காய வெச்சு, தடியால அடிச்சா, காய்ஞ்ச விதைகள் கிடைக்கும். இது பாரம்பர்ய ரகங்கிறதால பக்குவம் பண்ணி, விதைக்கும் எடுத்து வெச்சுக்கலாம். புத்து மண் மாதிரி பொல பொலப்பான செம்மண்ணுல தண்ணிவிட்டு பிசைஞ்சு, அதுல பச்சை விதைகளைக் கொட்டி புரட்டணும். அதை அப்படியே வெயில்ல காயவெச்சு எடுத்துப் புடைச்சா மண் எல்லாம் போயிடும். இதை மூட்டைப் பிடிச்சு விதைக்குப் பத்திரப்படுத்தி  வெச்சுக்கணும். இப்படிப் பக்குவம் பண்ணிட்டா மூணு வருஷம் வரை வெச்சிருந்து விதைக்கலாம். நல்ல வீரியம் இருக்கும்” என்ற காவேரியம்மாள் நிறைவாக,

https://www.amazon.in/gp/product/B017Q209XM/ref=as_li_tl?ie=UTF8&tag=uzhavantamil-21&camp=3638&creative=24630&linkCode=as2&creativeASIN=B017Q209XM&linkId=1c38096626fe5de5fab5ed5ee59f52ff “பருவமழை பங்கமில்லாம கிடைச்சா ஏக்கருக்கு 600 கிலோ வரைகூட மகசூல் கிடைக்கும். இன்றைய தேதிக்கு ஒரு கிலோ 65 ரூபாய்னு விக்குது. நல்லபடியா விளைஞ்சு வந்தா, ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

அறுவடை பண்ணினதுக்கப்பறம் செடிகளைக் காய வெச்சு ஆடு மாடுகளுக்குத் தீவனமா போட்டுடுவோம். இதுல புரதச்சத்து அதிகம் இருக்கிறதால கறவை மாடுகளுக்குச் சாப்பிட கொடுத்தா பால் தரமா கிடைக்கும். இந்தப் பயிர்ல இன்னொரு விசேஷம் என்னான்னா மழை இல்லாட்டியும் பனியிலேயேகூட ஓரளவுக்கு விளைஞ்சு வந்துடும். எங்களை மாதிரி மானாவாரி விவசாயிகளுக்கு  இந்த மாதிரியான பயிர்கள்தான் ஓரளவுக்கு வருமானம் கொடுத்துட்டு இருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தார்.

வருமுன் காக்க வேண்டும்!
சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த பாகல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பெரியண்ணனிடம் மொச்சை சாகுபடி குறித்துப் பேசினோம். “எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து மொச்சை சாகுபடி இருக்கு. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள்ல இது முக்கியமான மானாவாரி பயிர்.

எங்க பகுதிகள்ல திடீர்னு விருந்தாளிகள் வந்துட்டா, உடனடியா ‘அரிசி பருப்புச் சாதம்’தான் சமைச்சு பரிமாறுவோம். அரிசி, மொச்சைப் பருப்பு கலந்து செய்ற கூட்டாஞ்சோறு இது. அதுக்காக எப்பவும் வீட்டுல காய்ஞ்ச மொச்சையை வெச்சிருப்போம். நிறைய பேர் இதை மானாவாரியில் தனிப்பயிரா சாகுபடி செய்றாங்க. மானாவாரி கேழ்வரகு சாகுபடியில் ஊடுபயிராவும் இதை விதைப்பாங்க. புரதம் அதிகம் இருக்கிறதால சத்தான உணவு இது. நிறைய வீரிய ரக மொச்சையெல்லாம் வந்தாலும், எங்க பகுதியில் இந்த நாட்டு மொச்சை ரகத்தைத்தான் சாகுபடி செய்வோம். அதனாலதான் இன்னும் இந்த ரகம் அழியாம இருக்கு.

இதுல, பெரும்பாலும் நோய்த்தாக்குதல் இருக்காது. காய்கள் முத்தும்போது சில சமயங்கள்ல காய்ப்புழுத் தாக்குதல் இருக்கும். அதனால, முன்னெச்சரிக்கையா பூச்சிவிரட்டியைத் தெளிச்சு விட்டுடணும். ஒரு லிட்டர் புங்கன் எண்ணெய், 2 லிட்டர் வேப்பெண்ணெய், 50 கிராம் காதிசோப் கரைசல் மூணையும் ஒண்ணா கலந்து... அதுல 100 மில்லியை 10 லிட்டர் குளிர்ந்த தண்ணீரில் கலந்து காய்கள் நனையும்படி தெளிச்சா காய்ப்புழுக் கட்டுப்படும். அதோட அசுவினி, சாறு உறிஞ்சும் பூச்சிகளும் கட்டுப்படும்’’ என்றார்.

Thursday, 2 March 2017

ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி)

உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்...
ந்தியர்கள் வங்கி சேமிப்புக் கணக்குக்கு அடுத்து அதிகம் பணத்தைச் சேமிக்கும் வழிகளில் மிக முக்கியமானதாக இருக்கிறது தொடர் சேமிப்பு திட்டம் என்கிற ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி) இருக்கிறது.
இந்த ஆர்டி திட்டத்தில் சிறிய தொகை இருந்தால்கூட முதலீட்டை  ஆரம்பித்துவிடலாம். இந்த ஆரம்ப முதலீடு, பொதுத் துறை வங்கிகளில் ரூ.100,  தனியார் வங்கிகளில் ரூ.500 - 1,000 என்கிற அளவில் இருக்கும். அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானலும் முதலீடு செய்துவரலாம். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் முதலீடு செய்வதாக இந்தச் சேமிப்புத் திட்டம் இருக்கிறது. இந்தத் திட்டத்தில் ஆறு மாதம் தொடங்கி 10 ஆண்டுகள் வரை தொடரலாம்.

   வட்டி எப்படி?

வட்டியானது சுமார் 5.75% தொடங்கி 7.10% வரை செல்கிறது. இந்த வட்டி, முதலீட்டுக் காலம் மற்றும் வங்கிகளைப் பொறுத்து சற்று மாறுபடக் கூடும்.  60 வயதுக்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்களுக்கு 0.5% கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. பல வங்கிகளில் விசாரித்து எந்த வங்கியில் கூடுதல் வட்டி கிடைக்கிறதோ, அதில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.

தற்போதைய நிலையில் முதலீட்டுக் காலம் அதிகரிக்க அதிகரிக்க, ஆர்டிக்கான வட்டி விகிதம் குறைந்துகொண்டே செல்கிறது. காரணம், வங்கி களுக்கு இப்போது குறுகிய காலத்தில்தான் அதிக நிதி தேவை. எனவே, குறுகிய கால முதலீட்டுக்கு அதிக வட்டியை அளித்து வருகின்றன.  இப்போதுள்ள நிலையில், குறுகிய கால ஆர்டி-யைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும்.

காலாண்டுக்கு ஒருமுறை கூட்டு வட்டி கணக் கிடப்படும். ஆனால், வட்டியானது முதிர்வின் போதுதான் தரப்படும். ஆர்டி-ல் மாதம் எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள், எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து ஆரம்பத்திலே முதிர்வுத் தொகையை சொல்லி விடுவார்கள். இடையில் தாமதமாக தவணை கட்டினால், அதற்கான வட்டியை முதிர்வின்போது பிடிப்பார்கள். எனவே, முடிந்த மட்டும் சரியான தேதியில் தொகையைக் கட்டிவிடுவது நல்லது. 

   யாரெல்லாம் தொடங்கலாம்?

1. 18 வயதுக்கு மேற்பட்ட தனி நபர்கள்

2. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூட்டாக

3.
 பத்து வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் (மைனர்)

4. கூட்டு நிறுவனங்கள், சொஸைட்டி

   என்ன ஆவணங்கள் தேவை?


புகைப்பட அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரங்கள் தேவைப்படும்.

புகைப்பட அடையாளத்துக்கு பாஸ்போர்ட், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், அரசு   அடையாள அட்டை போன்ற வற்றின் நகல்களைக் கொடுக்கலாம்.

முகவரிக்கான ஆதாரமாக பாஸ்போர்ட், ரேஷன் டெலி போன் பில், மின்சார பில், மைனர் களுக்கு பிறந்த நாள் சான்றிதழ் அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழ் வயது ஆதாரத்துக்குத் தேவைப்படும்.
 
  கணக்கை எப்படி ஆரம்பிப்பது?

ஏதாவது ஒரு வங்கிக்கு நேரில் சென்று எளிதில் ஆர்டி சேமிப்பைத் தொடங்கி விடலாம். அந்த வங்கியில் கணக்கு இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. பாஸ்போர்ட், பான் கார்டு ஜெராக்ஸ்  தேவைப்படும். தொடர் சேமிப்பு கணக்கைத்     தொடங்கும்போது, ஒரிஜினல் ஆவணங்களை எடுத்துச் செல்வது அவசியம்.

வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து ஆர்டி கணக்கு காசோலை மூலம் மாற்றிக்       கொள்ளலாம். அடுத்துவரும் மாதங்களில் வங்கிக் கணக்கிலிருந்து ஆர்டிக்கு பணம் எடுக்கப்படும். ஆர்டி கணக்கு என தனியாக பாஸ்புக் வழங்கப்படும். ஏற்கெனவே, வங்கிக் கணக்கு இருந்து, ஆன்லைன்/நெட் பேங்கிங் வசதி இருந்தால், ஆன்லைன் மூலம்கூட ஆர்டி கணக்கைத் தொடங்கிவிடலாம்.  
தவணை தவறினால்..!

ஆர்டி தொடங்கியபின் இடையில் மாதத் தவணையைக் குறைக்க முடியாது. எனவே, ஒருவரால் சுலபமாகக் கட்டக்கூடிய தொகையை தான் தவணையாகத் தேர்வு செய்யவேண்டும். தொடர்ந்து ஆறு மாதம் தவணை கட்டவில்லை  எனில், ஆர்டி கணக்கு தானாகவே குளோஸ் ஆகிவிடும். மாதத் தவணையை சரியான தேதியில் கட்டவில்லை எனில், அபராதம் இருக்கிறது. இந்த அபராதம் 100 ரூபாய்க்கு 1.5 ரூபாயாக இருக்கிறது. அதேபோல், முதிர்வுக்கு முன்னர் ஆர்டி-யை முடித்தால், அபராத வட்டி கட்டவேண்டி வரும். உதாரணத்துக்கு, ஒருவர் 2016 ஜனவரி 1-ம் தேதி 8% வட்டியில் ஆர்டி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.  இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்வ தாகத் திட்டம். ஆனால், சுமார் ஓராண்டு கடந்த  நிலையில், ஆர்டி கணக்கை 2016 டிசம்பர் 20-ம் தேதி திடீர் பணத் தேவைக்காக முடிக்கிறார். அபராத வட்டி 1%,  ஆர்டி ஓராண்டுக்கான ஆர்டி வட்டி 7% . இந்த  நிலையில் (7-1%=) 6% வட்டிதான் அவரின் முதலீட்டுக்கு கிடைக்கும்.

 நாமினி நியமிப்பது நல்லது! 

இந்த தொடர் சேமிப்புக் கணக்கில் நாமினி நியமன வசதி இருக்கிறது. நாமினியாக யாரையும் நியமிக்கவில்லை எனில், ஆர்டி போட்டிருப்பவர்  இறந்துவிட்டால், சட்டப்படியான வாரிசுகளுக்கு இந்தப் பணம் போய் சேரும். கூடியவரையில் கணக்கு ஆரம்பிக்கும்போதே நாமினியை நியமித்து, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுவிடுவது நல்லது.

  கடன் வசதி! 

வங்கி ஆர்டி முதலீட்டின் மீது கடன் வாங்க முடியும். உங்களின் ஆர்டி கணக்கில் சேர்ந்திருக்கும் தொகையில் 90% வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும். இந்த கடனுக்கான வட்டி, ஆர்டி வட்டியைவிட 1-2% அதிகமாக இருக்கும். இது வங்கிகளைப் பொறுத்து மாறுபடும்.

Wednesday, 1 March 2017

ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்


‘‘எங்கள் நிலத்தை வளமாக்க, ஏரியில் உள்ள வண்டல் மண்ணை எடுத்துப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டோம். இதன் விவரங்களைச் சொல்லுங்கள்?’’
வே.நந்தகோபால், அன்னங்கால்.
சூழலியலாளர் ரமேஷ் கருப்பையா  பதில் சொல்கிறார். 

‘‘தமிழ்நாடு அரசு 1959-ம் ஆண்டுச் சிறு கனிம விதி சட்டம் உட்பிரிவு 6-ன் படி ஏரி மற்றும் குளங்கள், ஆறுகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் அனுமதியின்றி எடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட அரசாணையின்படி 10 யூனிட்டுக்கு மேல் விவசாயிகள் மண்ணை அள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை ரத்துச் செய்ய வேண்டும். விவசாய நிலங்களில் மண்வளம் காக்க அனைத்து ஏரி, குளங்களிலும் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 

அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்தக் கண்டராதித்த சோழன் பெரிய ஏரியில் மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் விவசாயிகள் வண்டல் மண் அள்ளும் போராட்டம் நடத்தினர். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல விவசாய அமைப்புகள், வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வேண்டும் என தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வந்தன.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு கனிமவளச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவந்தது தமிழக அரசு. ஒரு தனிநபர் விவசாயத் தேவைக்காக, 30 கனமீட்டர் வரை இலவசமாக வண்டல் எடுத்துக்கொள்ளக் கட்டணம் இல்லை. அதற்கு மேல் கட்டணம் செலுத்தி, வண்டல் எடுத்துக்கொள்ளலாம் என விதிகள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் தான் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் கோரிக்கை வைத்தோம். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் வண்டல் மண்ணை அள்ள அனுமதி அளித்தார். 

இதனை அடுத்து புதுக்குறிச்சி ஏரியில் 300 கனமீட்டர் வரை வண்டல் எடுத்துள்ளனர் அந்தப் பகுதி விவசாயிகள். ஒவ்வொரு விவசாயியும் 30 கனமீட்டர் அளவுள்ள வண்டலைக் கட்டணம் இல்லாமலும், அதற்கு மேல் ஒரு கனமீட்டருக்கு 25 ரூபாய் வீதம் கட்டணம் (இந்த கட்டணத்தின் அளவு மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபடும்) செலுத்தியும் எடுத்துள்ளனர். 

மேலும், மாதம்  தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் தங்கள் பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஊருணிகளில் இருந்து வண்டல் எடுத்துப் பலன் பெற முடியும். வண்டல் எடுக்க விருப்பப்படும் விவசாயி, முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அல்லது ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் அடங்கிய குழு, சம்பந்தப்பட்ட நீர்நிலையில் எந்தப் பகுதியில் எவ்வளவு வண்டல் எடுக்கலாம் என ஆய்வுசெய்து அனுமதி அளிப்பார்கள். விவசாயி மனு அளித்த 30 நாள்களுக்குள் நடவடிக்கை எடுப்பார்கள். 

வண்டல் மண் அள்ளுவது குறித்துக் கடந்த ஆண்டு பசுமை விகடன் இதழில், விரிவான கட்டுரை வெளிவந்தது. அதைப் படித்த விவசாயிகள், உரிய அனுமதி பெற்று வண்டல் மண்ணை எடுத்துப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இணையதளத்தில், வண்டல் மண் அள்ளுவது சம்பந்தமான அரசாணை பி.டி.எஃப் வடிவில் கிடைக்கிறது. அரசு அதிகாரிகள் வண்டல் மண் அள்ள அனுமதி தர மறுத்தால், இந்த அரசாணையைக் காட்டி, உரிய அனுமதி பெற முடியும். 

தற்போதுள்ள சூழ்நிலையில் கூடுதலான சில சிறப்புத் திட்டங்களையும் அரசு தரப்பில் செய்ய வேண்டும் என விவசாய அமைப்புகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளைத் தூர் வாருவதற்கு அரசு தரப்பில் பல நூறு கோடிகளைச் செலவு செய்ய வேண்டும். இந்தத் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவு இருந்தாலே, அனைத்து ஏரிகளையும் எளிதாகத் தூர்வாரிவிடலாம். அதாவது, வண்டல் மண்ணை எடுப்பதற்கு விவசாயிகளிடம் எந்த விதமான கட்டணமும் வாங்கக்கூடாது. மேலும், ஜே.சி.பி இயந்திரம் மூலம் வண்டல் மண்ணை அள்ளி, லாரிகள் மூலம் எடுத்துச் சென்று சம்பந்தப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் இலவசமாகக் கொட்டும்படி செய்யலாம். இதனால், ஏரியின் ஆழமும் அதிகரிக்கும், விவசாயிகளின் நில வளமும் கூடி, நல்ல விளைச்சலும் கிடைக்கும்.’’  

தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்

வ்வொரு தாவரமும் ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால், நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள மருத்துவக் குறிப்புகள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் ‘ஆரை’ எனும் மூலிகை குறித்துப் பார்ப்போம்.
நல்ல நீர்ப்பிடிப்புள்ள குளங்கள், வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் வயல்வெளிகளிலும் காணப்படும் ஒரு கொடி வகைத் தாவரம்தான் ஆரை. இதில், ‘ஆரை’, ‘புளியாரை’, ‘வல்லாரை’ என மூன்று வகைகள் உள்ளன. இவை மூன்றுமே உண்ணத்தகுந்த சிறந்த கீரைகளாக இருப்பதுடன் மன அழுத்தத்தைக் குறைக்கும் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன. 

நாலிலைகள்கொண்ட ஆரை 

ஆரை, நீர் சதுப்பான இடங்களிலும் அதிக ஆழமில்லாத ஒடை, வாய்க்கால் நீரிலும் வளரக்கூடிய ‘ஒரு பருவத்தாவரம்’. ஒவ்வொரு தண்டிலும் தலா நான்கு இலைகளுடன் வேகமாகப் பரவக்கூடிய கொடி இது. மனித உடல் நன்றாக இயங்குவதற்குத் தேவையான சோடியம், இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு ஆகிய தாது உப்புக்களை அதிகம் உள்ளடக்கிய கீரை இது. 

முன்பு, கிராமங்களில் வயல் வேலையை முடித்துவிட்டு வருபவர்கள் ஆரை உள்ளிட்ட பல வகைக் கீரைகளைப் பறித்து உண்டு வந்தனர். அந்தக் கீரை வகைகளை ‘பண்ணைக் கீரை’ என்றும் சொல்வார்கள். சத்து நிறைந்த இந்தக் கீரைகள் உண்டதால், அவர்களுக்கு எவ்வித சத்து டானிக்குகளும் தேவைப் படவில்லை. ஆனால் நாகரிகமயமான இக்காலத்தில் கிராமங்களில் கூட இப்பழக்கம் மறைந்து விட்டதால்தான், சத்துக் குறைபாட்டுக்குள்ளாகி கை, கால் உளைச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அலைகின்றனர்.
ஆரை இலைகளைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இதைக் கீரை போல சமைத்து உண்டு வர, அதிகப்படியான தாய்ப்பால் சுரப்பு பிரச்னை கட்டுப் படும். இது சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறப்பான பலனளிக்கக் கூடியது. தொடர்ந்து இதைச் சமைத்து உண்டுவந்தால், போதுமான சத்துகள் கிடைப்பதோடு நீரிழிவு நோயும் கட்டுப்படும். தவிர நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு முதலான சிறுநீர்த்தாரை தொற்று நோய்களும் குணமாகும். ஒரே மூலிகை பல நோய்களைக் குணமாக்குவதுதான் சித்தமருத்துவத்தின் சிறப்பு. ஆங்கில மருத்துவத்தில், நீரிழிவு நோயாளிகளுக்குச் சத்துக்கு ஒரு மருந்து, நீரிழிவைக் குறைக்க ஒரு மருந்து, சிறுநீர்த்தாரை தொற்றுகளுக்கு ஒரு மருந்து எனத் தனித்தனியாக மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆரை இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து அதில் 100 கிராம் பொடியை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து, அவற்றை 250 மில்லியாகச் சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதில் வேளைக்கு 50 மில்லி என்ற அளவில், ஒரு நாளைக்கு 5 வேளை குடித்துவந்தால்... நீரழிதல், அதிகத்தாகம் முதலியவை குணமாகும். இந்த இலையைத் துவையல்போல அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி குணமாகும். 

மூவிலைகள்கொண்ட புளியாரை 

தண்டுக்கு தலா மூன்று இலைகளைக் கொண்டிருப்பது புளியாரை. இது, புளிப்புச்சுவை கொண்டிருப்பதால், புளியாரை என அழைக்கப்படுகிறது. (புளிச்சைக்கீரை வேறு, புளியாரை வேறு) இச்செடியில் அழகிய மஞ்சள் நிறப்பூக்கள் பூக்கும். இந்த இலைகளைக் கீரையாகச் சமைத்தோ அல்லது துவையலாகவோ உண்டு வர, தீராத வயிற்றுப்புண்கூட குணமாகும். புளியாரையைப் பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வர மூலவாயு, மூலக்கடுப்பு, ரத்தக் கழிச்சல், பித்தமிகுதி, சுவையின்மை, மயக்கம் ஆகியவை தீரும்.
புளியாரை இலைச் சாற்றை காலை, மாலை வேளைகளில் வெறும் வயிற்றில் குடித்து வர அமீபிக் சீதபேதி நோய் குணமாகும். ரத்தமும் ஜலமுமாக அடிக்கடி கழிவதை ‘கிராணிக் கழிச்சல்’, ‘சீதபேதி’ என்பர். இதில் ஒரு வகைதான் அமீபிக் சீதபேதி. சிலருக்கு மலங்கழிக்கும்போது ஆசனவாய் வெளிவந்து விடும். அப்படி வரும் ஆசனவாய் தானாகவே உட்சென்று விடும். ஆனால், சிலருக்கு விரல்களால் அழுத்தி உள்ளே தள்ள வேண்டியிருக்கும். இந்நோய் கண்டவர்கள், தொடக்க நிலையிலேயே புளியாரை இலைச்சாற்றை குடித்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு வேளைக்கு 15 மில்லி முதல் 30 மில்லி வரை குடிக்கலாம். 

புளியாரை இலைகளைச் சிறிது தண்ணீர்விட்டு அரைத்து வலியுடன்கூடிய கட்டிகள் மற்றும் வீக்கத்தின் மீது போட்டு வந்தால் குணமாகும்.
 
புளியாரை இலைகளுடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து மரு, பரு, பாலுண்ணி ஆகியவற்றின் மீது தொடர்ந்து ஒரு மாதம் வரை பூசி வர, அவை தழும்பில்லாமல் மறையும். 

கிராணி நோய்களால் பாதிக்கப்பட்டோர் புளியாரைக் கீரையை உணவாகவோ துவையலாகவோ சாறெடுத்தோ குடித்து வர விரைவில் குணமாகும். புளியாரைக் கீரை பச்சையாகக் கிடைக்காத நிலையில் ‘புளியாரை நெய்’ என்னும் சித்த மருத்துவ மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம். 

ஓரிலைகொண்ட வல்லாரை 

ஒவ்வொரு தண்டும் ஒரு கொடியாக உருவாகிப் பரவக்கூடியது, வல்லாரை. இதில் தண்டில் தனித்தனி இலைகளாக உருவாகும். இது, நினைவாற்றல் பெருகவும் மூளை செல்கள் வலுவாகவும் உதவுகிறது. தவிர, வலிப்பு நோய் உள்ளிட்ட பல நோய்களைக் குணமாக்குகிறது. 

‘வல்லாரை யினிலை மருவுகற்ப மாய்க்கொள் 

எல்லாப் பிணிகளு மிலாமையா மெய்யினில்..’
 
‘வல்லாரைக் கற்பமுண்ண வல்லாரை யார் நிகர்வார் 

கல்லாரைப் போலக் கலங்காமல்..’ என, வல்லாரை அனைத்து நோய்களையும் குணமாக்கும்’ எனத் தேரையர் எனும் சித்தர் குறிப்பிட்டுள்ளார். 

வல்லாரையோடு உப்பு, மிளகு, சீரகம் சேர்த்து கீரையாகவே சமைத்து உண்டு வந்ததால்தான் நம் முன்னோர் நோய்களை வென்று வாழ்ந்து வந்தனர். வல்லாரையைப் போலவே வடிவமைப்புள்ள ‘எலிக்காதிலை’ எனும் கீரையையும் வல்லாரை என ஏமாற்றுபவர்கள் உண்டு. அதனால், கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும். 

வல்லாரை இலையைத் தூசு, மண் போக நன்கு கழுவி, நீரை வடித்து நிழலில் காய வைக்க வேண்டும். 13 பங்கு எடை உலர்ந்த வல்லாரை இலைகளுடன், ஒரு பங்கு எடை வசம்பு சேர்த்துப் பொடியாக்கிக்கொண்டு இதனை உண்டு வரலாம். வல்லாரை, இயல்பில் வெப்பமானது என்பதால் வசம்பு சேர்ப்பது அவசியம். 

500 மில்லி கிராம் பொடியை 3 மில்லி நெய்யில் கலந்து உண்டுவந்தால் வாயு, அண்ட வீக்கம் (விதை வீக்கம்), யானைக்கால், தோல்நோய்கள், நெறிக்கட்டு, மாதவிடாய்க் கோளாறு ஆகியவை நீங்கும். அதோடு மூளை பலம், சுறுசுறுப்பு, சிந்தனைத்திறன் ஆகியவை மேம்படும். 48 நாள்கள் தொடர்ந்து உண்டுவிட்டுப் பிறகு, 48 நாள்கள் இடைவெளி விட்டு மீண்டும் ஒரு மண்டலம் உண்ணலாம். இவ்வாறு ஒரு மண்டல இடைவெளி விட்டுச் சுழற்சி முறையில் எத்தனை முறை வேண்டுமானாலும் உண்டு வரலாம். ஆனால், கால இடைவெளி அவசியம்.
வல்லாரைப் பொடி, வல்லாரை நெய், வல்லாரை இளகம் (லேகியம்), வல்லாரை மிட்டாய் எனப் பல்வேறு வடிவங்களில் வல்லாரை தற்போது கிடைக்கிறது. வல்லாரையில் உள்ள பிராமிக் அமிலம், ஐசோபிராமிக் அமிலம், பிரமோசைடு, பிராமினோசைடு முதலிய மருந்தியல் பொருள்கள் மூளையின் செயல்திறனை இயல்பாக வைத்திருக்க உதவுகின்றன. அதோடு மனஅழுத்தம் குறையவும், மூளை செல்கள் திறம்படச் செயல்படவும் உதவுவதால் சுறுசுறுப்பு உண்டாகி நினைவாற்றல் அதிகரிக்கும். வல்லாரைக்கு என்றே தனியாக ஒரு நூல் வெளியிடும் அளவுக்கு வல்லாரைப் பற்றிய செய்திகள் உள்ளன. இத்தகைய சிறப்புமிக்க வல்லாரையை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம். 

இயற்கை வேளாண்மையின் மகிமை


‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வாரின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு இயற்கை விவசாயம் செய்து வருபவர்கள் ஏராளமானோர் உண்டு. அவர்களில் பல பெண் விவசாயிகளும் அடக்கம். அப்படிப் பயிற்சி எடுத்துக்கொண்டு திறம்படச் செயல்பட்டுவரும் குறிப்பிடத்தக்க பெண் விவசாயிகளில் ஒருவர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி.
 
மானாவாரி இயற்கை விவசாயம் செய்துவரும் இவர், ‘இளவட்டம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, சுற்றுச்சூழல், இயற்கை விவசாய முறைகள், மறந்துபோன விளையாட்டுகள் ஆகியவை குறித்து கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சிகள் அளித்து வருகிறார். அதோடு, பிரத்யேகமாகப் பெண்களுக்கு இயற்கை விவசாய முறைகளையும் சொல்லிக் கொடுத்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் அழகாபுரியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது அக்கனாபுரம் கிராமம். இங்குதான் இருக்கிறது செந்தமிழ்ச் செல்வியின் ‘சதுரகிரி கானகம்’ எனும் தோட்டம். பசுமை விகடன் பெண் விவசாயிகள் சிறப்பிதழுக்காக அவரைச் சந்தித்தோம். 

“சொந்த ஊரு சிவகாசி. கல்லூரிப் படிப்பு மதுரையில். பத்திரிகை துறை, சமூக பணியில் முதுகலை முடிச்சுட்டு எம்.ஃபில்லும் முடிச்சேன். அப்புறம், மதுரையில் இருக்கிற தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் ‘இளவட்டம்’ங்கிற அமைப்பைத் தொடங்கி மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சேன்.
எனக்குச் சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ரொம்ப ஆர்வம். இளவட்டம் அமைப்புல இயக்குநரா வேலை செய்துட்டு இருந்தப்போதான், இயற்கை விவசாயம் பத்தி தெரிஞ்சுகிட்டேன். உடனே அதுல ஆர்வம் வந்து, நிறைய விஷயங்களைத் தேடித்தேடிப் படிக்க ஆரம்பிச்சேன். அப்போதான் நம்மாழ்வார் ஐயா பத்தித் தெரிஞ்சுகிட்டு, அவர் பேசுற கூட்டங்கள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். அப்புறம் நாங்க நடத்துன பல கூட்டங்களுக்கும் நம்மாழ்வார் ஐயாவை அழைச்சிட்டு வந்து பேச வெச்சேன். அது மூலமா இயற்கை விவசாயத்தை அவர்கிட்ட இருந்து கத்துகிட்டேன். அதுல எனக்கு இருக்கிற ஆர்வத்தைப் பார்த்து ஐயா ரொம்ப ஊக்கப்படுத்தினார். அப்போ எனக்குச் சொந்தமா நிலம் கிடையாது. இயற்கை விவசாயம் செய்யறதுக்காக நிலம் தேட ஆரம்பிச்சேன். மதுரையில் அப்பா எனக்குக் கொடுத்திருந்த வீட்டுமனையை வித்துட்டு அந்தப் பணத்துலதான் இந்த நிலத்தை வாங்கினேன். ‘மதுரை நகரத்துக்குள்ள இருக்கிற இடத்தை வித்துட்டு, யாராவது இந்த சீமைக் கருவேலங்காட்டை வாங்குவாங்களா?’னு சொந்தக்காரங்ககூட கேலி பண்ணுனாங்க. ஆனா, எனக்கு இயற்கை விவசாயத்துல இருந்த ஆர்வத்தால அதையெல்லாம் காதுல வாங்கிக்கவே இல்லை.
ஆரம்பத்துல வாங்கினது 9 ஏக்கர். மானாவாரி நிலம்தான். அதுல, 2 ஏக்கர் நிலத்தை வித்து, கிடைச்ச பணத்தை வெச்சு மீதி 7 ஏக்கர் நிலத்துல இருந்த மஞ்சணத்தி, சீமைக் கருவேல மரங்களை வெட்டி சுத்தம் செஞ்சேன். அப்புறம் மூணு வருஷம் பல தானிய விதைப்பு, ஆட்டுக்கிடைன்னு போட்டு மண்ணை நல்லா வளமாக்கினேன். 

2014-ம் வருஷம், முதன்முதலா ஒரு ஏக்கர்ல மானாவாரியில் குதிரைவாலி சாகுபடி செஞ்சேன். முழுக்க இயற்கை முறைதான். அதுல நல்ல மகசூல் கிடைச்சது. அதுல இருந்து தொடர்ந்து மானாவாரியா சிறுதானியங்களைச் சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்” என்று, தான் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்த கதையைச் சொன்ன செந்தமிழ்ச்செல்வி தொடர்ந்தார். 

“இப்போ ரெண்டு ஏக்கர் நிலத்தில 170 குமிழ், 150 தேக்கு, 200 வேம்பு கன்றுகளை நடவு செஞ்சிருக்கேன். மரக்கன்றுகள் நட்டு ஆறு மாசம் ஆகுது. ஐம்பது சென்ட் நிலத்துல சம்பங்கி, 50 சென்ட் நிலத்துல மல்லிகைப்பூன்னு சாகுபடியில இருக்கு. சம்பங்கியில ஒரு மாசமா, பூ அறுவடை கிடைச்சிட்டு இருக்கு. மல்லிகை இன்னும் பூக்க ஆரம்பிக்கலை. 

மூணு கலப்பின மாடுகள் வெச்சிருக்கேன், அதுக்காக ஒரு ஏக்கர் நிலத்துல கோ-4 தீவனப்புல்லும் அகத்தியும் போட்டிருக்கேன். மாடுகள்ல கிடைக்கிற பால் வீட்டுத் தேவைக்குத்தான். மீதி இருக்கிற பாலை பஞ்சகவ்யா தயாரிக்க உபயோகப்படுத்திக்குவேன். சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சு மரப்பயிர்களுக்கும் பூக்களுக்கும் மட்டும் பாசனம் பண்றேன். மானா வாரியாத்தான் சிறுதானியங்களைச் சாகுபடி செஞ்சிட்டிருக்கேன். 
போன ஆடிப்பட்டத்துல 3 ஏக்கர்ல தனித்தனியா வரகு, தினை, குதிரைவாலின்னு போட்டிருந்தேன். வரகுல ஊடுபயிரா பாசிப்பயறும் உளுந்தும் போட்டேன். தினையில தட்டை, மொச்சை விதைச்சிருந்தேன். எல்லாமே அறுவடையாகிடுச்சு.
60 கிலோ வரகு, 40 கிலோ குதிரைவாலி, 180 கிலோ தினை, 28 கிலோ பாசிப்பயறு, 19 கிலோ உளுந்து, 12 கிலோ தட்டைப்பயறு, 10 கிலோ மொச்சைனு அறுவடையானது. உளுந்து, பாசி, மொச்சை, தட்டைப்பயறை வீட்டுத்தேவைக்காக எடுத்து வெச்சிக்கிட்டேன். வரகு, குதிரைவாலி, தினை மூணையும் அடுத்தப் போக விதைப்புக்கு எடுத்து வெச்சிட்டு, மீதியை விதைக்காக வித்துடலாம்னு இருக்கேன். உள்ளூர் விவசாயிகளே கேட்டிருக்காங்க. ஒவ்வொரு முறையும் விதைக்கும் இடுபொருளுக்கும் செலவில்லை. இடுபொருள் தெளிக்கவும், அறுவடை பண்றதுக்கும் மட்டும்தான் செலவு. 

சம்பங்கியில் தினமும் அரைகிலோ அளவுக்குதான் பூ வருது. மல்லிகையும் மகசூலுக்கு வந்திடுச்சின்னா தினசரி வருமானம் கிடைக்க ஆரம்பிச்சிடும்” என்ற செந்தமிழ்ச்செல்வி நிறைவாக, “போன வருசம் ஆடி மாசம் மட்டும் ஒரு மழை கிடைச்சது. அதுக்கப்புறம் ஐப்பசி மாசம் வரை சுத்தமா மழையே இல்லை. ஆனாலும்,  இந்தளவுக்கு மகசூல் கிடைச்சிருக்கு. அதுக்குக் காரணம் அமுதக்கரைசலும் பஞ்சகவ்யாவும்தான். மூணு முறை இதைத் தெளிச்சதால செடிகள் கருகாம மகசூல் கிடைச்சிருக்கு. மழை கிடைச்சிருந்தா நல்ல மகசூல் எடுத்திருப்பேன். எங்க ஊர்லயே நிறைய பேர் நிலத்துல செடிகளெல்லாம் வறட்சியால கருகிப்போச்சு. அந்த வகையில் இயற்கை விவசாயம் செஞ்சதுல நான் தப்பிச்சுக்கிட்டேன். அதுதான் இயற்கை விவசாயத்தோட மகிமை” என்று பெருமிதத்துடன் சொல்லி விடைகொடுத்தார்.