Tuesday, 28 February 2017

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்! 

 அடுத்து, தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களில் ஒன்றான, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme (SCSS) Account) பற்றி விரிவாகப் பார்ப்போம்.  

  அடிப்படைத் தகுதி

 கடந்த 2004-ம் ஆண்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களுக்கு வருமானவரியைச் சேமிக்கும் திட்டம் இது.  

விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் முன்கூட்டியே ஓய்வுபெற்ற 55 வயதுள்ளவர்கள் மற்றும்  அதற்கு மேற்பட்ட வயதினர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.  பணி ஓய்வுபெற்ற ஒரு மாதத்துக்குள் இதில் முதலீடு செய்துவிட வேண்டும். முதலீட்டுத் தொகை பணி ஓய்வின்போது கிடைத்தத் தொகையை விட அதிகமாக இருக்கக்கூடாது. ராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள், வயது வரம்பு எதுவும் இல்லாமல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
 
  குறைந்த முதலீட்டுத் தொகை

இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச  முதலீட்டுத் தொகை ரூ.1,000 ஆக உள்ளது. அதன் பிறகு, ஆயிரத்தின் மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ.15 லட்சம். கணவன் - மனைவி கூட்டாக இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம்.  
 
எங்கே முதலீட்டை ஆரம்பிப்பது?

தபால் அலுவலகம், எஸ்பிஐ, ஐசிஐசிஐ போன்ற வங்கிகள் மூலம் முதலீடு செய்யலாம். தற்போதைய நிலையில், சில வங்கிகளில் இந்தத் திட்டத்தில் ஆன்லைன் மூலம் சேர்ந்துகொள்ளும் வசதி இருக்கிறது. 
 
 தேவையான ஆதாரங்கள்

அடையாளம், வயது, முகவரிக்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும். மார்பளவு புகைப்படங்கள் இரண்டு தேவைப்படும்.

கணக்குத் தொடங்கும்போது, அசல் சான்றிதழ்களை உடன் எடுத்துச்செல்வது அவசியம். 
  வட்டி வருமானம், முதலீட்டுக் காலம்! 

தற்போதைய நிலையில், ஆண்டுக்கு  8.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி மூன்று மாதங்களுக்கு  ஒருமுறை வழங்கப்படும். மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் வட்டி வழங்கப்படும். 

வட்டி கணக்கிடும் ஃபார்முலா

வட்டி கணக்கிடுவதற்கான ஃபார்முலா இதுதான்...  Pr / (4X100). இதில் P என்பது Principal, அதாவது, அசல்; r என்பது Interest Rate, அதாவது வட்டி விகிதம். இந்த ஃபார்முலாவை ஓர் உதாரணத்துடன் சொன்னால் நன்றாகப் புரியும்.     

ஒருவர் ரூ. 1 லட்சம் ரூபாயை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்கிறார். வட்டி ஆண்டுக்கு 8.5%. அவருக்கு மூன்று மாதங்கள் கழித்து எவ்வளவு தொகை கிடைக்கும்? வட்டி = (1,00,000 X 8.5) / (4X100) = 1,00,000 / 400 = 2,125.
ஐந்து ஆண்டுகள் வரை முதலீட்டைத் திரும்ப எடுக்க முடியாது. அதன்பிறகு முதலீட்டுத் தொகை திரும்ப அளிக்கப்படும்போது எடுத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின்கீழ் செய்யப்படும் முதலீட்டுக்கு மூத்த குடிமக்கள் நிபந்தனைக்கு உட்பட்டு, நிதி ஆண்டில் ரூ. 1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும்.  வட்டி வருமானத்துக்கு வரி உண்டு. 

நிதி ஆண்டில் வட்டி வருமானம் 10,000 ரூபாயைத் தாண்டும்போது மூலத்தில் வரி (டிடிஎஸ்) பிடிக்கப்படும். இதைத் தவிர்க்க, படிவம் 15ஜி அல்லது 15 ஹெச்  சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம்,  ஒருவரின் இதர வருமானமாகக் கருதப்படும். அது அவரின் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, அடிப்படை வருமான வரம்புக்கு ஏற்ப (10%, 20%, 30 %) வரி கட்ட வேண்டிவரும்.  

இந்த மூத்த குடிமக்கள் திட்டத்தில் சேர்ந்துவிட்டு, இடையில் விலகினால் அபராதம் உண்டு. ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்குள் கணக்கை முடித்தால், முதலீட்டுத் தொகையில் 1.5% அபராதமாகச் செலுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகள் கழித்த நிலையில், 1% அபராதம் உண்டு.  இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். 

ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்துவிட்டு, இரண்டு ஆண்டுக்குள் கணக்கை முடித்தால் ரூ.1,500 அபராதமாகச் செலுத்த வேண்டும்.  வெளிநாட்டு இந்தியர்கள், இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் இதில் முதலீடு செய்ய அனுமதி இல்லை.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் முக்கியமான 10 அம்சங்கள்

1. ரிஸ்க் தேவையில்லை என்று நினைக்கும் மூத்த குடிமக்களுக்கு ஏற்றது.

2.  தபால் அலுவலகச் சேமிப்புத் திட்டங்களில்  அதிக வட்டி கிடைக்கும் திட்டம் இது.

3. வட்டி வருமானம் ஐந்தாண்டுகளுக்கு மாறாது.
4. முதலீட்டுச் செலவுக்கு இல்லை.

5. நாமினி நியமன வசதி உண்டு. கணக்கை முடிக்கும்முன் எப்போது வேண்டுமானலும் நாமினியை நியமித்துக்கொள்ளலாம். 
  
6. ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை இயக்கலாம். ஆனால், முதலீட்டு உச்சவரம்பு       ரூ.15 லட்சம்தான்.  

7. ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு கணக்கை மாற்றிக்கொள்ள முடியும்.

8. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி வருமானம் வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். 

9. ஐந்தாண்டுகளுக்குப் பின், முதலீட்டை மூன்றாண்டுகளுக்கு நீடித்த நிலையில், ஓராண்டு நிறைவு பெற்றபிறகு எடுக்கப்படும் தொகைக்கு அபராதம் இல்லை. 

10.
 ஆன்லைன் மூலம் சேர்ந்துகொள்ளும் வசதியும் இந்தத் திட்டத்தில் உண்டு. 

No comments:

Post a Comment